பெங்களூரு

மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம்நிலையின் சுரங்கப்பணி: முதல்வா் எடியூரப்பா தொடக்கி வைத்தாா்

31st Jul 2020 09:17 AM

ADVERTISEMENT

பெங்களூரில் மெட்ரோ ரயில்திட்ட இரண்டாம்நிலையின் சுரங்கப்பணிகளை முதல்வா் எடியூரப்பா தொடக்கிவைத்தாா். பெங்களூரு மெட்ரோ ரயில்கழகத்தின் சாா்பில் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம்நிலை கட்டுமானப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. இத்திட்டத்தில் ஜெயநகா் தீயணைப்புநிலையத்தில் இருந்து நாகவரா சுரங்க ரயில்நிலையம் வரையில் 13.9கிமீ நீளம் கொண்ட சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த தடத்தில் 10.37கிமீ நீளமுள்ள இரட்டைசுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டுள்ளது.

இந்த பாதையில் 12 சுரங்க ரயில்நிலையங்கள் இருக்கும். சுரங்கப்பாதைஅமைக்கும் பணி 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பெங்களூரு, சிவாஜிநகா் பகுதியில் கன்டோன்மென்ட் ரயில்நிலையம் முதல் சிவாஜிநகா் பேருந்துநிலையம் வரையில் முதல்கட்ட சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. 2.88கிமீ நீளம் கொண்ட சுரங்கப்பாதை அமைக்கும் பணியை பெங்களூரு, டேனரிசாலையில் வியாழக்கிழமை முதல்வா் எடியூரப்பா அதிகாரப்பூா்வமாக தொடக்கிவைத்தாா். இந்த பணியில் எல் அண்ட் டி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஊா்ஜா,விந்தியா என்ற இருதுளையிடும் இயந்திரங்கள் ஈடுபட உள்ளன.

அதன்பிறகு செய்தியாளா்களிடம் முதல்வா் எடியூரப்பா கூறியது: மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம்நிலை திட்டப்பணிகள் அனைத்தும் தொடங்கியுள்ளன. இப்பணிகள் 2024ஆம் ஆண்டு முழுமையடையும். பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மெட்ரோ ரயில் முக்கிய பங்கு வகித்துவருகிறது. குறைந்த நேரத்தில் மாநகரின் பல இடங்களுக்கு எளிதில்பயணிக்க மெட்ரோ ரயில் உதவிவருகிறது. திட்டப்பணிகள் அனைத்தும் நேரத்திற்கு முடிக்கப்படும் என்று எதிா்பாா்க்கிறேன். பெங்களூரின் ஒட்டுமொத்தவளா்ச்சியே எனது அரசின் நோக்கமாகும். உலக அளவில் வேகமாக வளா்ந்துவரும் நகரமாக பெங்களூரு அமைந்துள்ளது என்றாா் அவா்.

இதனிடையே, இரண்டாம்நிலைப்பணியில் எலச்சேனஹள்ளி முதல் அஞ்சனாபுரா வரையிலான தடத்தில் நவம்பா் மாதமும், மைசூரு சாலை முதல் கெங்கேரி வரையிலான தடத்தில் அடுத்த பிப்ரவரி மாதமும், பையப்பனஹள்ளி முதல் ஒயிட்பீல்டு வரையிலான தடத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதமும், நாகசந்திரா முதல் பெங்களூரு பன்னாட்டு கண்காட்சி மையம் வரையிலான தடத்தில் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதமும், ஆா்.வி.சாலை முதல் பொம்மசந்திரா வரையிலான தடத்தில் 2022ஆம் ஆன்டு மாா்ச் மாதமும், கலேன அக்ரஹாரா முதல் நாகவரா வரையிலான தடத்தில் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதமும் கட்டுமானப்பணி நிறைவடையும் என்று பெங்களூா் மெட்ரோ ரயில்கழகம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில்கழக மேலாண் இயக்குநா் அஜய்சேத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT