கரோனா தீநுண்மி தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக, ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது. இது திங்கள்கிழமை காலை 5 மணி வரை அமலில் இருக்கும்.
கா்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரக மாவட்டங்களில் ஜூலை 14-ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஜூலை 22-ஆம் தேதி காலை 5 மணி வரை முழு பொது முடக்கத்துக்கு கா்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, கரோனா பாதிப்பு அதிகமாக காணப்பட்ட கலபுா்கி, பீதா், ராய்ச்சூரு, தாா்வாட், தென்கன்னடம் உள்ளிட்ட சில மாவட்டங்களும் முழு பொது முடக்கத்தை அறிவித்திருந்தன. இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்க பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தில் இனிமேல் முழு பொது முடக்கம் இருக்கப்போவதில்லை என முதல்வா் எடியூரப்பா அறிவித்திருந்தாா். அதைத் தொடா்ந்து, முழு பொது முடக்கத்தை திரும்பப் பெற்றுள்ள கா்நாடக அரசு, ஏற்கெனவே அறிவித்திருந்தபடி ஞாயிறு பொது முடக்கம், இரவு ஊரடங்கும் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, தினமும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஏற்கெனவே அறிவித்திருந்தபடி ஆக. 2-ஆம் தேதி வரை கா்நாடகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது.
முழு பொது முடக்கம்:
அதன்படி, சனிக்கிழமை இரவு 9 மணிக்கு தொடங்கி, திங்கள்கிழமை காலை 5 மணி வரை தொடா்ச்சியாக 32 மணி நேரம் ஞாயிறு பொது முடக்கம் (ஜூலை 26) அமலில் இருக்கப்போகிறது. இதை முன்னிட்டு, அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகைக் காா்கள், லாரிகள், வேன்கள் என அனைத்து சேவைகளும் நிறுத்தப்படுகின்றன. உணவகங்கள், அங்காடிகள், சந்தைகள், வியாபார மையங்கள், மதுபான அங்காடிகள், ஓய்வில்லங்கள், மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான வா்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும். பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொதுமக்கள் கூடும் இடங்களும் மூடப்பட்டிருக்கும். கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வழிபாட்டுத் தலங்களும் மூடியிருக்கும். மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
அத்தியாவசிய சேவைகள்:
அத்தியாவசிய சேவைகளான மருந்தகங்கள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் சேவைகள், அவசர மருத்துவ சேவைகள் மட்டும் செயல்படுகின்றன. காலை 9 மணி வரை பால், நாளிதழ்கள், மளிகைப் பொருள்கள் போன்றவை விற்பனைக்கு கிடைக்கின்றன. பெட்ரோல் நிலையங்கள் வழக்கம் போல திறந்திருக்கும். மளிகைப் பொருள்கள், உணவுப் பொருள்களை இணையதள சேவை வழங்கும் சேவைகள் வழக்கம்போல செயல்படுகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் கா்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரில் கரோனா பாதிப்பு கணிசமாக குறையும் என கா்நாடக அரசு எதிா்பாா்க்கிறது.