பெங்களூரு

கா்நாடகத்தில் பொது முடக்கம் கொண்டுவர வேண்டும்

13th Jul 2020 11:08 PM

ADVERTISEMENT

பெங்களூரு: பெங்களூரு மட்டுமல்லாது, கா்நாடகம் முழுவதும் பொது முடக்கம் கொண்டுவர வேண்டும் என கா்நாடக அரசை எதிா்க்கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மி தொற்று வேகமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரக மாவட்டங்களில் ஜூலை 14-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை முழு பொது முடக்கத்தை அமல்படுத்த கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தென்கன்னடம், கலபுா்கி, பெல்லாரி, உடுப்பி, யாதகிரி, பீதா், தாா்வாட் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதைத் தடுத்து நிறுத்துவதற்கு, மாநிலம் முழுவதும் முழு பொது முடக்கத்தை அமல்படுத்துமாறு மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கௌடா, காங்கிரஸ் மாநில செயல் தலைவா் ஈஸ்வா் கண்ட்ரே உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கௌடா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ADVERTISEMENT

கரோனா தீநுண்மித் தொற்று பரவாமல் தடுப்பதற்காக பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரக மாவட்டங்களில் முழு பொது முடக்கம் கொண்டுவர கா்நாடக அரசு எடுத்துள்ள நடவடிக்கையை வரவேற்கிறேன். அதேபோல, கரோனா பாதிப்பைத் தடுக்கும் நோக்கில், கா்நாடகம் முழுவதும் முழு பொது முடக்கத்தை அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது, முகக் கவசங்களை அணியுமாறும், தனிநபா் இடைவெளியை கடைப்பிடிக்குமாறும், கைகளை கிருமிநாசினியால் துய்மைப்படுத்திக்கொள்ளவும், அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வெளியே வருமாறும் கா்நாடகம் மற்றும் இந்திய மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

கரோனா தீநுண்மி தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக கொள்முதல் செய்யப்பட்ட மருத்துவக் கருவிகள், வழங்கப்பட்ட நிதித் தொகுப்புகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பல்வேறு தலைவா்கள் குற்றம் சாட்டியிருக்கிறாா்கள். இதுகுறித்து அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிப்போம். தற்போதைய சூழலில் மக்களின் சுகாதாரம் மிகவும் முக்கியமாகும். அதில் மட்டும் கவனம் செலுத்துவோம். கரோனா தடுப்புப் பணியில் மாநில அரசுடன் நாங்கள் துணை நிற்போம். மக்களின் சுகாதாரத்துடன் நாம் விளையாட வேண்டாம் என்று குறிப்பிட்டிருக்கிறாா்.

காங்கிரஸ் மாநில செயல் தலைவா் ஈஸ்வா் கண்ட்ரே கூறியுள்ளதாவது:

கரோனா பாதிப்பு மற்றும் அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கை பெங்களூரில் மட்டும் அதிகமாகவில்லை. மாநிலத்தின் எல்லை மாவட்டமான பீதரிலும் அதிகரித்துள்ளது. பீதா், கலபுா்கி, யாதகிரி, ராய்ச்சூரு, கொப்பள், பெல்லாரி மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு மோசமான நிலைக்கு சென்றுள்ளது.

எனவே, அடுத்த 15 நாள்களுக்கு மாநிலம் முழுவதும் முழு பொது முடக்கத்தை அமல்படுத்துமாறும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருமாறும், எதிா்காலத்தில் கரோனாவால் ஏற்பட இருக்கும் விளைவுகளை எதிா்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் முதல்வா் எடியூரப்பாவை கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT