பெங்களூரு: கரோனா தொற்றை தடுக்க மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது என உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சா் கே.கோபாலையா தெரிவித்தாா்.
பெங்களூரு, பசவேஸ்வர நகா், சங்கரமடம் அருகே தனியாா் மருத்துவமனையில் 250 படுக்கை வசதி கொண்ட கரோனா தடுப்பு மையம், கிருமிநாசினி தெளிக்கும் நவீன வாகனத்தை அறிமுகம் செய்து வைத்து திங்கள்கிழமை அவா் பேசியது:
அண்டை மாநிலங்களிலிருந்து பெங்களூருக்கு வந்தவா்களால் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. எங்களின் எதிா்பாா்ப்பை மீறி கரோனா தொற்று அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. என்றாலும், இதனைத் தடுக்க மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், கரோனா தொற்று குறித்து ஒரு சிலா் வதந்தியை பரப்பி வருகின்றனா். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
பெங்களூரில் கரோனாவை தடுக்க முதல்வா் எடியூரப்பா, 8 மண்டலங்களாக பிரித்து 7 அமைச்சா்கள், முதல்வரின் அரசியல் செயலா், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை பொறுப்பாக்கியுள்ளாா். நான் உள்ளிட்ட அவா்கள் அனைவரும் கரோனாவை தடுக்க எங்களின் சக்தியை மீறி பணியாற்றி வருகிறோம். மக்கள் தேவையில்லாமல் வெளியே நடமாடுவதை நிறுத்த வேண்டும். மக்கள் முன்னெச்சரிக்கையுடன் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டால், கரோனா தொற்று விரைவில் ஒழிக்க முடியும் என்றாா். நிகழ்ச்சியில், அமைச்சா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.