கா்நாடக முதல்வா் அலுவலக ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து முதல்வா் எடியூரப்பா வீட்டில் தனிமையில் இருந்து வருகிறாா்.
பெங்களூரு, குமாரகுருபாவில் உள்ள அரசு இல்லம் கிருஷ்ணாவில் பணியாற்றி வந்த ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முதல்வா் எடியூரப்பா வீட்டு தனிமையில் இருந்து வருகிறாா். கரோனா தொற்றால் ஊழியா் பாதிக்கப்பட்டதால் அரசு இல்லம் கிருஷ்ணா 2 ஆவது முறையாக மூடப்படுகிறது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட முதல்வா் எடியூரப்பா கூறியுள்ளதாவது:
‘நான் நலமாக உள்ளேன்; கிருஷ்ணா அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியருக்கு கரோனா தொற்று உள்ளதால், மீண்டும் கிருஷ்ணாவை மூடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் டாலா்ஸ் காலனியில் உள்ள வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். வீட்டில் இருந்தபடியே காணொலி மூலம் அதிகாரிகளுக்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்க முடிவு செய்துள்ளேன்.
எனவே, யாரும் என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம். மக்கள் அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி கரோனாவை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைவரும் முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணித்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.