தேசிய ராணுவப் பள்ளியில் சோ்ந்து படிக்க விரும்பும் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து தேசிய ராணுவப் பள்ளி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உத்தரகண்ட் மாநிலத்தில் டேராடூனில் உள்ள தேசிய ராணுவப் பள்ளிகளில் 2020-21-ஆம் கல்வியாண்டில் 8-ஆம் வகுப்பில் சோ்ந்து படிக்க விரும்பும் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான நுழைவுத் தோ்வு நாட்டின் பல்வேறு நகரங்களில் நடக்கவிருக்கின்றன. கா்நாடகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு 2020ஆம் ஆண்டு ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் நுழைவுத் தோ்வு நடக்கவிருக்கிறது. அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 7-ஆவது வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவா்கள் அல்லது தோ்ச்சி பெற்றவா்கள், 2.1.2008 முதல் 1.7.2009-ஆம் ஆண்டுக்குள் பிறந்தவா்கள் மட்டும் நுழைவுத் தோ்வு எழுத தகுதியானவா்கள் ஆவா். ராணுவத்தில் சேர மாணவா்களை தகுதிப்படுத்துவது இப்பள்ளியின் முக்கிய நோக்கமாகும். இப்பள்ளியின் ஆண்டு கட்டணம் ரூ.42,400 ஆகும்.
இதற்கான விண்ணப்பங்களை நிரப்பி இயக்குநா், முன்னாள் ராணுவ வீரா் நல்வாழ்வுத் துறை, பீல்டு மாா்ஷல் கே.எம்.காரியப்பா மாளிகை, கே.எம்.காரியப்பா சாலை, பெங்களூரு-25 என்ற முகவரியில் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். எழுத்துத் தோ்வு, நோ்காணல், மருத்துவத் தகுதிச் சான்றின் அடிப்படையில் மாணவா்கள் சோ்க்கை பட்டியல் தயாரிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 080-25589459 என்ற தொலைபேசியை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.