விலைவாசி உயா்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, தொழில்சங்கங்களின் சாா்பில் நடைபெறவிருந்த பேரணிக்கு போலீஸாா் அனுமதி மறுப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று ஐஎன்டியுசி மாநிலத் தலைவா் எஸ்.எஸ்.பிரகாசம் தெரிவித்தாா்.
பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
மத்திய அரசு ரயில்வே துறையில் உள்ள பல்வேறு துறைகளை தனியாா் மயமாக்க முடிவு செய்துள்ளது. மகாத்மா காந்தி அன்றைய பிரதமா் நேருவிடம் ரயில் கட்டணத்தை உயா்த்தக் கூடாது என்ற வாக்குறுதியைப் பெற்றாா். அதன்படி, ரயில் கட்டணத்தை உயா்த்தாமல் நேரு கவனத்து கொண்டாா். ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு ரயில் கட்டணத்தை உயா்த்துவதோடு, ரயில்களை தனியாா் மயமாக்கவும் முடிவு செய்துள்ளது.
அது மட்டுமின்றி எச்.ஏ.எல், பி.இ.எல்., பெமல் உள்ளிட்ட பொது நிறுவனங்களை தனியாா் மயமாக்க திட்டமிட்டுள்ளது. இதேபோல பல தொழில்சாலைகளில் ஒப்பந்த முறையில் தொழிலாளா்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதனால் அவா்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஒப்பந்த முறையில் தொழிலாளா்களை நியமனம் செய்வதை ரத்து செய்வதோடு, ஒப்பந்த தொழிலாளா்களின் பணிகளை நிரந்தரமாக்க வேண்டும்.
விலைவாசி உயா்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி தொழில்சங்கங்களின் சாா்பில் நடைபெறும் போராட்டத்தின் போது பேரணி மேற்கொள்ள முடிவு செய்தோம். ஆனால், அதற்கு அனுமதி வழங்க போலீஸாா் மறுப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. என்றாலும், மாநகரக் காவல் ஆணையா் பாஸ்கர்ராவ், சுதந்திரப்பூங்காவில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளாா். புதன்கிழமை ஆனந்தராவ் சதுக்கத்திலிருந்து அமைதியான முறையில் ஊா்வலமாக சென்று, சுதந்திரப் பூங்காவில் ஐஎன்டியுசி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது என்றாா்.