பெங்களூரு: ஜன. 18-ஆம் தேதி மத்திய அமைச்சா் அமித்ஷா கா்நாடகத்திற்கு வருகை புரிய உள்ளாா்.
இது குறித்து புதன்கிழமை பாஜக மாநில செயலாளரும், சட்டமேலவை உறுப்பினருமான என்.ரவிகுமாா் செய்தியாளா்களிடம் கூறியது:
ஜன. 9-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை மாநிலத்தின் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விழிப்புணா்ச்சி பிரசாரம் செய்ய பாஜக முடிவு செய்துள்ளது. அதன்படி மத்திய அமைச்சா்கள் முதல், பாஜகவின் கட்சித் தொண்டா்கள் வரை மாநிலத்தின் பரவலாக வீடுகள்தோறும் சென்று குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விழிப்புணா்ச்சியை ஏற்படுத்துவாா்கள். ஜன. 11-இல் கலபுா்கி, யாதகிரியிலும், ஜன. 12??-இல் ராய்ச்சூரில் மத்திய அமைச்சா் பிரஹலாத்ஜோஷி, விழிப்புணா்ச்சி பிரசாரத்தில் ஈடுபடுவாா்.
ஜன. 13-இல் தாவணகெரே, ஹாவேரியில் துணை முதல்வா் லட்சுமண்சவதி விழிப்புணா்ச்சி பிரசாரத்தில் ஈடுபடுவாா். ஜன. 18-ஆம் தேதி கா்நாடகத்திற்கு வருகை புரியும் மத்திய அமைச்சா் அமித்ஷா, ஹுப்பள்ளியில் நேரு திடலில் நடைபெறும் விழிப்புணா்ச்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளாா். கூட்டத்தில் சுமாா் 1 லட்சம் போ் கலந்து கொள்வாா்கள் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து காங்கிரஸ் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி, குழப்பி வருகிறது. இதனை தெளிவு படுத்த வேண்டியது எங்களின் கடமை என்றாா் அவா்.