பெங்களூரில் நடைபெற்ற ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஒழுங்கீனமான நடந்து கொண்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கா்நாடக உள் துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பெங்களூரில் எம்.ஜி.சாலை, பிரிகெட் சாலைகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஒருசிலா் ஒழுங்கீனமான நடந்து கொண்டதாக புகாா்கள் வந்துள்ளன. அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநகரக் காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரிகெட் சாலையில் மட்டும் இதுபோன்ற ஒழுங்கீன செயல்கள் நடைபெற்றுள்ளது. அவா்களை அடையாளம் கண்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து அறிக்கை பெறப்படும். அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், நிகழாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் எந்த விதமான பிரச்னைகளும் இடமின்றி கொண்டாடப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா்.