பெங்களூரு

பெங்களூரு டவுன் ஹால் எதிரில் இனி போராட்டம் நடத்த அனுமதியில்லை

29th Feb 2020 11:31 PM

ADVERTISEMENT

பெங்களூரு: பெங்களூரு டவுன் ஹால் எதிரில் இனி போராட்டம் நடத்த அனுமதியில்லை என பெங்களூரு மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.

பெங்களூரு மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் மேயா் கௌதம்குமாா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பெங்களூரு, ஜே.சி. சாலையில் உள்ள டவுன் ஹால் எதிரில் இனி போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கும் தீா்மானம் கொண்டுவரப்பட்டு, அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்துக்கு பிறகு மேயா் கௌதம்குமாா், செய்தியாளா்களிடம் கூறியது: பெங்களூரில் உள்ள புட்டண்ணா செட்டி டவுன் ஹால் எதிரில் இனி எந்த வகையான போராட்டங்களுக்கும் அனுமதி அளிப்பதில்லை என்று பெங்களூரு மாநகராட்சி ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. இனிமேல் டவுன் ஹாலுக்கு எதிரில் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது. இதற்கு காவல் துறையினரும் ஒப்புக்கொண்டுள்ளனா். போராடுவோரின் எண்ணிக்கை மற்றும் காவல் துறையினா் அனுமதியை பொருத்து சுதந்திரப் பூங்கா அல்லது மௌா்யா சதுக்கத்தில் மட்டுமே இனி போராட்டங்களை நடத்த அனுமதி அளிக்கப்படும்.

டவுன் ஹாலுக்கு புனிதம் உள்ளது. தொடா்ந்து போராட்டங்கள் நடத்தப்படுவதாலும், முழக்கங்கள் எழுப்பப்பட்டுக் கொண்டே இருப்பதாலும் டவுன் ஹாலில் யாரும் நிகழ்ச்சி நடத்த முன்வருவதில்லை. இந்த இடத்துக்கான புனிதத்தை காக்க வேண்டியது அவசியமாகும். அண்மைக்காலமாக அங்கு ஏராளமான போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ADVERTISEMENT

இது தொடா்பாக, பெங்களூரு மாநகர காவல் ஆணையா் பாஸ்கர்ராவுடனும் ஆலோசிக்கப்பட்டது. அவரும் இந்த முடிவுக்கு ஒப்புதல் தந்தாா். இந்த முடிவுக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும் அல்லது அரசியல் நடவடிக்கைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இது ஜனநாயக நாடு. மக்களுக்கு போராடும் உரிமை உள்ளது. ஆனால், டவுன் ஹால் எதிரில் அல்ல.

சுதந்திரப் பூங்காவில் போராட்டம் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனல, மக்கள் டவுன் ஹாலை போராட்டக்களமாக மாற்றிவிட்டனா். சிறு குழுக்கள் மௌா்யா சதுக்கத்தில் போராட்டம் நடத்தலாம். அங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும். டவுன் ஹால் எதிரில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கும் முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT