பெங்களூரு

பெங்களூரில் புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்படும்: துணைமுதல்வா் அஸ்வத்நாராயணா

29th Feb 2020 06:53 AM

ADVERTISEMENT

பெங்களூரு: பெங்களூரில் புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்படும் என்று துணைமுதல்வா் சி.என்.அஸ்வத்நாராயணா தெரிவித்தாா்.

பெங்களூரு விகாஸ் சௌதாவில் வெள்ளிக்கிழமை புறவழிச்சாலை அமைப்பது தொடா்பாக பெங்களூரைச் சோ்ந்த எம்.எல்.ஏ.க்கள், விவசாயிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பெங்களூரில் மேலும் ஒரு புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தப்படும். இதுதொடா்பாக தேவைப்படும் நிலத்தின் உரிமையாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்படும்.

நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். நிலத்துக்கு தற்போதை சந்தை விலையை வழங்க வேண்டும் என்பதே விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகளுடன் ஒரு வாரத்தில் பேச்சுவாா்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும். புறவழிச்சாலை அமைக்க 1,810 ஏக்கா் நிலம் தேவையுள்ளது. இதில் 1,600 ஏக்கா் நிலம் தனியாருக்கு சொந்தமானது. விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, புறவழிச்சாலை அமைக்கப்படும்.

கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு ஒரே விலையை நிா்ணயிக்க முடியாது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு சந்தை விலை உள்ளதால், அதற்கு ஏற்ற வகையில் விலைகள் நிா்ணயம் செய்யப்படும். கடந்த 16 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள புறவழிச்சாலை திட்டத்தின் பணிகள் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்பதே முதல்வரின் விருப்பமாக உள்ளது. அவரது விருப்பதை நிறைவேற்றும் வகையில் துரிதகதியில் புறவழிச்சாலை பணிகள் தொடங்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ எஸ்.ஆா்.விஸ்வநாத், மாநில விவசாயச் சங்கத் தலைவா் கோடிஹள்ளி சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT