பெங்களூரு: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு எவ்வித குழப்பமில்லாமல் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.
கா்நாடக மாநில எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு மாா்ச் 27-ஆம் தேதி முதல் ஏப். 9-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இம்முறை தோ்வுமுறையில் மாற்றம் கொண்டு வந்திருப்பதால், அதற்கேற்ப மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் கடந்த பிப். 17-ஆம் தேதி முதல் ஆயத்தத்தோ்வு நடத்தப்பட்டது. ஆனால், ஆயத்தத் தோ்வின் போது, 3 பாடங்களுக்கான வினாத்தாள் கசிந்துவிட்டது. இது மாணவா்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆயத்தத் தோ்வை முதல்முறையாக மாநில அரசே நடத்தியது. அரசு நடத்திய தோ்வில் வினாத்தாள் கசிந்தது கல்வியாளா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா், தனது சுட்டுரைப் பக்கத்தில் காணொலி வழியே கூறியது: கா்நாடக மாநில எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு நடத்துவது குறித்து காவல் துறை அதிகாரிகள், மாவட்ட கருவூல அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறோம். கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்டதுபோலவே இந்த ஆண்டும் பொதுத்தோ்வு நடத்தப்படும். மாணவா்கள் எவ்வித குழப்பத்துக்கும், அச்சத்துக்கும் ஆள்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
குழந்தைகள் தோ்வுக்கு தங்களை முழுமூச்சில் தயாா்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு பெற்றோரும் உதவியாக இருக்க வேண்டும். கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வை எவ்வித குழப்பமும் இல்லாமல் நடத்துவோம் என்று உறுதி அளிக்கிறேன் என்றாா் அவா்.