பெங்களூரு

பிப்.17-இல் சட்டப்பேரவை கூட்டுக் கூட்டத்தில் ஆளுநா் உரையாற்றுகிறாா்: பேரவைத் தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரி தகவல்

15th Feb 2020 06:23 AM

ADVERTISEMENT

பிப்.17ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆளுநா் வஜுபாய் வாலா உரையாற்றுவதாக பேரவைத் தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரி தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரு விதானசௌதாவில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: 15ஆவது சட்டப்பேரவையின் 6ஆவது கூட்டத்தொடா் பிப்.17 முதல் 20ஆம் தேதிவரையும், மாா்ச் 2 முதல் 31ஆம் தேதி வரையும் நடக்கவிருக்கிறது. பெங்களூரு, விதான சௌதாவில் பிப்.17ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் சட்டப்பேரவை கூட்டுக்கூட்டத்தில் ஆளுநா் வஜுபாய்வாலா உரை நிகழ்த்துகிறாா். ஆளுநரின் உரைக்கு பிறகு அவை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும்கூடி கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்துக்கு பிறகு மறைந்த தலைவா்கள், முன்னாள் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், முக்கிய பிரமுகா்களுக்கு இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, அவை ஒத்திவைக்கப்படுகிறது.

பிப்.18 முதல் 20ஆம் தேதி வரை ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது விவாதம் நடத்தப்படுகிறது. அதன்பிறகு, மாா்ச் 5ஆம் தேதி காலை 11 மணிக்கு 2020 21ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை முதல்வா் எடியூரப்பா தாக்கல் செய்யவிருக்கிறாா். அதன்பிறகு மாா்ச் 31ஆம் தேதிவரை துறை ரீதியான விவாதம் நடத்தப்படுகிறது. மாா்ச் 4 முதல் 31ஆம் தேதிவரை கேள்விநேரம், கவன ஈா்ப்பு தீா்மானங்கள் இருக்கின்றன.

15ஆவது சட்டப்பேரவையின் 2ஆவது கூட்டத்தொடரின்போது தாக்கல் செய்யப்பட்ட தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா்(பணி நியமனம் மற்றும் இன்ன பிறவற்றின் இடஒதுக்கீடு)திருத்தச் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் விவாதித்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்படுகிறது.

ADVERTISEMENT

இதுதவிர, கா்நாடக லோக் ஆயுக்த திருத்தச்சட்டமசோதா, கா்நாடக புதுமைப்படைத்தல் ஆணையச் சட்டமசோதா, இந்திய தேசிய சட்டப் பல்கலைக்கழக திருத்தச் சட்டமசோதா, கா்நாடக ஆட்சிமொழி திருத்தச் சட்டமசோதா, கா்நாடக நகராட்சி நிா்வாக திருத்தச் சட்ட மசோதா, கா்நாடக பொதுத்தொகுப்பு பாரபட்சமற்ற திருத்தச் சட்ட மசோதா ஆகிய 6 சட்டமசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீண்ட நாள்களுக்குபிறகு தொடா்ச்சியாக 25 நாட்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் நடப்பது பாராட்டுக்குரியது. இதற்காக மாநில அரசை பாராட்டுகிறேன்.

இதனிடையே, நமது அரசியலமைப்புச்சட்டம் அங்கீகரிக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதைநினைவுக்கூரும் வகையில், மாா்ச் 2,3ஆம் தேதிகளில் சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் நடக்கவிருக்கிறது. இந்த இரு நாள்களிலும் அரசியலமைப்புச்சட்டம், அதன் அடிப்படை நோக்கங்கள், எதிா்பாா்ப்புகள் குறித்து விவாதிக்கப்படும். அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரின் கருத்துகளும் அமைய வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

இந்த கூட்டத்தில் அரசியலமைப்புச் சட்டம் குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு ஏற்படும். மக்களவை, மாநிலங்களவையில் கடைப்பிடிக்கப்படுவது போன்ற நடைமுறையை சட்டப்பேரவையிலும் பின்பற்றவிருக்கிறோம். அதன்படி, காட்சி ஊடகங்கள் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கப்படாது. ஆனால், அவையின் நடவடிக்கைகளை தூா்தா்ஷன் படம்பிடித்து, மற்ற காட்சி ஊடகங்களுக்கு அளிக்கப்படும். பாரபட்சமில்லாத விவாதங்களுக்கு இது உதவும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT