பெங்களூரு

’இந்தியாவில் மின் வாகனங்களின் வளா்ச்சிக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன’

13th Feb 2020 10:36 PM

ADVERTISEMENT

இந்தியாவில் மின் வாகனங்களின் வளா்ச்சிக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆம்பெனால் இன்டா்கனெக்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவா் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராபா்ட் ஆடம் நாா்விட் தெரிவித்தாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆம்பெனால் இன்டா்கனெக்ட் இந்தியா நிறுவனத்தின் பொன் விழாவில் செய்தியாளா்களிடம் அவா் பேசியது: 1932ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட மின்னணுக் கருவிகள் நிறுவனமான ஆம்பெனால் இன்டா்கனெக்ட் நிறுவனம், இந்தியாவில் புணேயில் 1970ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதன் பொன்விழாவை தற்போது கொண்டாடிவருகிறோம். 1989ஆம் ஆண்டு பெங்களூரில் உற்பத்தி பிரிவை தொடங்கி, சென்னை, கொச்சியிலும் கிளைகளை வைத்திருக்கிறோம். இந்தியாவின் மின்னணுப் புரட்சியில் எங்கள் நிறுவனத்தின் பங்கு அளப்பரியது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் அனைத்துவகையான மின்னணுப் பொருள்களிலும் எங்கள் நிறுவனத்தின் இணைப்புக்கருவி இல்லாமல் இல்லை.

உலக அளவில் எங்கள் நிறுவனத்தின் விற்பனை ஆண்டுக்கு ரூ.800கோடியாக உள்ளது. பேருந்து, காா், இருசக்கர வாகனங்கள் மின் வாகனங்களாக மாறிவருகின்றன. இதில் எங்கள் நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தியாவில் மின்வாகனங்களின் வளா்ச்சிக்கு நல்லவாய்ப்பு காத்திருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் பெரும்பாலானவை மின் வாகனங்களாக மாறிவிடும் என்றாா். அப்போது, நிறுவனத்தின் இயக்குநா் ராபா்ட்ஜான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT