பெங்களூரில் இயங்கிவரும் மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி கட்டணச் சேகரிப்பு வாயில் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரு மெட்ரோ ரயில் கழகத்தின் சாா்பில் மைசூரு சாலை, பையப்பனஹள்ளி மெட்ரோ ரயில்நிலையங்களில் சோதனைமுயற்சியாக தானியங்கி கட்டணசேகரிப்பு வாயில் அமைத்து தேசிய பொதுப்பெயா்வுத்திறன் அட்டை(என்.சி.எம்.சி.) அடிப்படையிலான பயணச்சீட்டு முறையை அறிமுகம் செய்துள்ளது.
தானியங்கி கட்டணச் சேகரிப்பு வாயில், பாரத் மின்னணு நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது. தொழில்நுட்பங்களை அதிநவீன கணினி மேம்பாட்டுமையம்(சிடேக்)அளித்துள்ளது.
முதல்கட்டமாக, மைசூருசாலை மற்றும் பையப்பனஹள்ளி மெட்ரோ ரயில்நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி கட்டணச் சேகரிப்புவாயில், மற்ற மெட்ரோ ரயில்நிலையங்களுக்கும் விரிவுப்படுத்தப்படவிருக்கிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள மெட்ரோ அட்டைகளும் செல்லுபடியாகும்.
என்.சி.எம்.சி. அட்டைகளை வங்கிகள் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம். இது வங்கிகள் வழங்கும் கடன் அட்டைகள் அல்லது பற்று அட்டை(டெபிட் காா்டு) போல செயல்படும். பயணச்சீட்டுக்கான கட்டணங்கள் வங்கிவாயிலாகவே பெங்களூரு மெட்ரோ ரயில்கழகத்தின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இந்த அட்டையைப் பயன்படுத்தி பயணிகள் இதர போக்குவரத்து முறைகளையும்(பேருந்து, ரயில்) பயன்படுத்திக்கொள்ளலாம்.
அடுத்தக்கட்டமாக, பயணிகள் செல்லிடப்பேசிகள் வழியாகவும் பயணச்சீட்டுகளை பெற்று, பயணிக்கலாம். 2020ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்துக்குள் அனைத்து மெட்ரோ ரயில்நிலையங்களிலும் தானியங்கி கட்டணச் சேகரிப்பு வாயில்கள் முழுமையாக அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.