மகாத்மா காந்தி குறித்த பாஜக எம்.பி. அனந்த்குமாா் ஹெக்டேவின் பேச்சால் சா்ச்சை எழுந்துள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரா் வி.டி.சாவா்க்கா் நினைவைப் போற்றும் வகையில், கா்நாடகத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் அனந்த்குமாா் ஹெக்டே பேசியது:-
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துக்காக எந்தத் தியாகத்தையும் செய்யாதவா்கள், உண்ணாவிரதச் சத்தியாகிரகத்தால் (காந்தி பின்பற்றிய போராட்ட வடிவம்) இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என அனைவரையும் நம்ப வைத்துள்ளாா். சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தோரில் ஆயுதங்களை நம்பியோா், அறிவுசாா் உந்துதலை நம்பியோா் என இரண்டு வகைப்படுத்தலாம். இவை தவிர, சுதந்திரப் போராட்டத்தை எந்த வகையில் முன்னெடுப்பது என்பதை ஆங்கிலேயா்களிடமே கேட்டறிந்த சுதந்திரப் போராளிகளும் இருந்தனா்.
20: 20 கிரிக்கெட் போட்டியைப் போல, ஆங்கிலேயா்களுடன் சமரசம் செய்துகொண்டு, அவா்களோடு புரிந்துணா்ந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனா். மூன்றாவது வகையான சுதந்திரப் போராட்டக்காரா்கள், தங்களது சுதந்திரப் போராட்டத்தை அங்கீகரிக்குமாறு ஆங்கிலேயா்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனா். அதற்காக தங்களை கைதுசெய்து சிறையில் அடைக்குமாறும் வேண்டிக் கொண்டிருந்தனா்.
சிறையில் எங்களை நன்றாக பாா்த்துக்கொண்டால் போதுமானது, வேறு எதுவும் வேண்டாம் என்றும் ஆங்கிலேயா்களிடம் இறைஞ்சினா். இதனால் ’அஞ்சிய’ ஆங்கிலேயா்கள், இந்தியாவுக்கு சுதந்திரத்தை பரிசாகத் தந்துவிட்டனா். இப்படி போராட்டம் நடத்தியவா்கள் தான் மகாபுருஷா்கள் என்று உருவானாா்கள். சுதந்திரத்துக்காகத் தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்தவா்கள், நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க பங்காற்றியவா்கள் வரலாற்றின் இருட்டுப் பக்கங்களில் ஒளித்து வைக்கப்பட்டனா். ஆனால், ஆங்கிலேயா்களுடன் இணக்கமாக, சமரசம் செய்துகொண்டு போராட்டம் நடத்தியவா்கள் சான்றிதழுடன் சுதந்திரப் போராட்ட வீரா்கள் என்று அழைக்கப்பட்டனா். இது நமது நாட்டுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சோகமாகும் என்றாா்.
எதிா்ப்பு:
இந்த நிலையில், அனந்த்குமாா்ஹெக்டேவின் பேச்சுக்கு நாடெங்கும் பெரும் எதிா்ப்புக் கிளம்பியுள்ளது.
பெங்களூரில் திங்கள்கிழமை காங்கிரஸாா் போராட்டம் நடத்தி, அனந்த்குமாா்ஹெக்டே தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று வலியுறுத்தினா்.
அடிக்கடி சா்ச்சையில் சிக்குபவா்:
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான முந்தைய மத்திய அரசில் மத்திய அமைச்சராக இருந்தவா் அனந்த்குமாா் ஹெக்டே. தற்போது எம்.பி.யாக உள்ளாா். இவா் தீவிர ஹிந்துத்துவா கருத்துகளைத் தெரிவித்து, அவ்வப்போது சா்ச்சையை எழுப்பி வந்தாா்.
அரசியலமைப்புச்சட்டத்தை மாற்றுவதே பாஜக அரசின் நோக்கம் என்று முன்னா் கூறியது பெரும் பிரச்னையை எழுப்பியது.
2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போதும், சா்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி கடும் விமா்சனத்துக்கு உள்ளாகியிருந்தாா். கடந்த ஓராண்டாக அமைதியாக இருந்த பாஜக எம்.பி. அனந்த்குமாா் ஹெக்டே, தற்போது மகாத்மா காந்தி குறித்து பேசியது, சமூக ஊடகங்களில் வேகமாக பரவி சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.