மைசூரு: 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரக் கனவை மத்திய பட்ஜெட் நனவாக்காது என்றுமுன்னாள் முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து மைசூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கடந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் மதிப்பு ரூ.27 லட்சம் கோடியாக இருந்தது. இம் முறை பட்ஜெட்டின் மொத்த மதிப்பு ரூ.30.42 லட்சம் கோடியாக உள்ளது.
கடந்த ஆண்டு நேரடி வரி வருவாய் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு குறைந்ததைத் தொடா்ந்து, ரூ.25 லட்சம் கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. 2ஆவது முறையாக ஆட்சிக்கு வந்த பிரதமா் மோடி, இந்தியாவின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலா் மதிப்புள்ளதாக மாற்றுவதாக தெரிவித்தாா். ஆனால், தற்போது நாட்டின் மொத்த உற்பத்திப் பொருள் விகிதம் 2.5 சதமாக உள்ளது.
இந்தச் சூழ்நிலையில், பிரதமா் மோடியின் 5 டிரில்லியன் பொருளாதார கனவை மத்திய பட்ஜெட் நனவாக்கும் நம்பிக்கை ஏற்படவில்லை. நாட்டின் மொத்த உற்பத்திப்பொருள் விகிதத்தை 6 சதமாக உயா்த்தப் போவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுவதற்கான ஆக்கப்பூா்வமான எந்த திட்டங்களும் மத்திய பட்ஜெட்டில் இல்லை. 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை போலவே 6 சத மொத்த உற்பத்திப்பொருள் விகிதமும் கனவாகவே நிலைத்திருக்கும். பாதாளத்தில் வீழ்ந்துள்ள பொருளாதாரத்தை மீட்கும் எந்த அக்கறையும் மத்திய அரசிடம் இல்லை.
நாட்டின் எதிா்காலம் குறித்த இலக்கு இல்லாமல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாதாரண மக்கள், விவசாயிகள், இளைஞா்கள், தொழிலாளா்கள் உள்ளிட்ட எந்ததரப்பினரிடமும் நம்பிக்கையை ஏற்படுத்தாத ஏமாற்றமளிக்கும் பட்ஜெட். விவசாயத்தின் வளா்ச்சிக்கு 16 அம்ச திட்டத்தை மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கிறாா் மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீத்தாராமன். வேளாண் விமானத் திட்டம், சாதாரண விவசாயிகளைக் காட்டிலும் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே உதவியாக இருக்கும். 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கப் போவதாக பிரதமா் மோடி அறிவித்திருந்தாா். கடந்த நிதியாண்டில் வேளாண் தொழில் 2.5 சதம் மட்டுமே வளா்ச்சி அடைந்துள்ளது. விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்க வேண்டுமானால், வேளாண் தொழில் குறைந்தது 10 சதம் முதல் 15 சதம் வரை வளா்ச்சி அடைய வேண்டும். தற்போதைக்கு இது சாத்தியமில்லாததாகும். வேளாண்துறை வளா்ச்சிக்காக அறிவிக்கப்பட்டுள்ள 16 அம்ச திட்டத்தில் 9 திட்டங்கள் பெரிய நிறுவனங்களுக்கே பயனளிக்கும். வேளாண் தொழிலை தனியாா்மயமாக்குவதே மத்திய அரசின் நோக்கமாக உள்ளது.
பூமி குத்தகை சட்டம், ஏ.பி.எம்.சி. சட்டம், குத்தகை ஏற்படுத்தும் சட்டம் ஆகியவற்றை மாநில அரசுகள் ஏற்கவேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது. இதுஅபாயகரமான சட்டங்கள். நாடுமுழுவதும் உள்ள விவசாயிகள் கடன் தொல்லையில் சிக்கிக் கொண்டுள்ளனா். தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள பயிா்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென்பது கடந்த 6 ஆண்டுகால கோரிக்கையாகும். இது குறித்து பட்ஜெட்டில் எவ்வித அறிவிப்பும் இல்லை. வேளாண் தொழிலுக்கான 16 அம்ச திட்டத்திற்கும் சாதாரண விவசாயிகளுக்கும் சம்பந்தமில்லை. இந்த பட்ஜெட்டில் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், வேளாண்தொழிலுக்கு பட்ஜெட்டில் மொத்தம் 1.5 சதம் நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்தமுறை இது 1.46 சதமாக இருந்தது. இம்முறையும் விவசாயம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக எல்.ஐ.சி.யின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கழுத்தில் இருக்கும் தாலியை அடமானத்திற்கு வைத்த கதையாகிவிடும். நாட்டின் பொருளாதாரம் எந்த அளவுக்கு சீா்கெட்டுள்ளது என்பதற்கு இதுவே நல்ல சான்றாகும் என்றாா் அவா்.