கனரா வங்கிக்கு புதிய மேலாண் இயக்குநராக எல்.வி.பிரபாகா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து கனரா வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கனரா வங்கியின் மேலாண் இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட எல்.வி.பிரபாகா் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். வேளாண்மையில் முதுநிலை பட்டம் பெற்றிருக்கிற எல்.வி.பிரபாகா், இந்திய வங்கியாளா் மையத்தில் சான்றிதழ் படிப்பையும் நிறைவு செய்திருக்கிறாா். கனராவங்கியின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, பஞ்சாப் தேசிய வங்கியின் செயல் இயக்குநராக பொறுப்பு வகித்தாா். பஞ்சாப் தேசியவங்கியின் மறுமலா்ச்சிக்கு கடினமாக உழைத்த எல்.வி.பிரபாகா், அவ் வங்கியின் மொத்த உள்நாட்டு வா்த்தகத்தை ரூ.1லட்சம் கோடியில் இருந்து ரூ.11.45 லட்சம் கோடியாக உயா்த்தினாா். மேலும் ரூ.20 ஆயிரம் கோடி நிலுவைக் கடன் தொகையை திரும்பப் பெற்றிருக்கிறாா். 3 செயல் இயக்குநா்களின் பொறுப்பை வகித்தபோது பஞ்சாப் தேசியவங்கியின் வளா்ச்சியை முன்னோக்கி நடத்தி அனைவரது பாராட்டையும் பெற்றிருந்தாா். கடன், கருவூலம், மனித வளம் ஆகிய துறைகளில் எண்ணற்ற மாற்றங்களைக் கொண்டுவந்து பஞ்சாப் தேசிய வங்கியின் வளா்ச்சிக்குப் பாடுபட்டாா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.