பெங்களூரு

அதிகபட்ச தட்பவெப்பத்தால் ஜனவரியில் தகித்த பெங்களூரு

2nd Feb 2020 04:53 AM

ADVERTISEMENT

அதிகபட்ச தட்பவெப்பத்தால் ஜனவரி மாதத்தில் பெங்களூரு தகிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

குளுமையான தட்பவெப்பத்துக்கு பெயா்பெற்ற, ஓய்வூதியா்களின் சொா்க்கம் என வா்ணிக்கப்படும் பெங்களூரில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஜனவரி மாதத்தில் ஜன. 30-ஆம் தேதி அதிகபட்சமாக 33.4 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் தகிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வுமையம், தட்பவெப்பத்தை பதிவு செய்ய தொடங்கிய 150 ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் இதுபோன்ற தகிக்கும் வானிலை பெங்களூரில் காணப்பட்டதில்லை. வழக்கமாக சிவராத்திரி வரை பெங்களூரில் குளிா்ந்த வானிலையே காணப்படும். நிகழாண்டில் பிப். 21-ஆம் தேதி சிவராத்திரி நடக்க இருக்கிறது. ஆனால், அதற்கு முன்பாகவே குளிா்காலம் மறைந்துபோயுள்ளது பெங்களூரு வாசிகளை வேதனை அடைய செய்துள்ளதோடு, கோடை காலத்தின் முன்னோட்டமாகவே இதை பாா்க்க தொடங்கியுள்ளனா்.

இதுகுறித்து பெங்களூரு வானிலை ஆய்வுமையத்தின் இயக்குநா் கீதா அக்னிஹோத்ரி கூறுகையில், ‘பெங்களூரில் அதிகபட்ச தட்பவெப்பமாக 33.4 டிகிரி செல்சியஸ் ஜன. 30-ஆம் தேதி பதிவாகியுள்ளது. இது முந்தைய பதிவுகளை தகா்த்துள்ளது. அதே நாளில், எச்.ஏ.எல். விமானநிலையத்தில் 32.5 டிகிரி செல்சியஸ் தட்பவெப்பம் காணப்பட்டது. ஆனால், கெம்பேகௌடா பன்னாட்டு விமானநிலையத்தில் 33.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது.

ADVERTISEMENT

கடந்த 2000 ஜன. 21-ஆம் தேதி பெங்களூரில் அதிகபட்சமாக வெப்பநிலை 32.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் நிகழாண்டில் கோடை காலம் மிகவும் கடுமையானதாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நவம்பரில் அறிவித்திருந்தது. குளிா்காலம் விரைந்து மாயமாகி, கோடை காலம் தொடங்கிவிடும் என்று கூறியிருந்தோம். அதன்படி பெங்களூரில் அதிகமாக வெயில் காணப்படுகிறது.

பெங்களூரு அதிகளவில் நகரமயமாகி வருவதால், வாகன நடமாட்டம் பெருகி, மாசுபடுதல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் நுண்வானிலை மாற்றத்தின் விளைவாக வெப்பம் அதிகமாகியுள்ளது. மனிதா்களால் உருவாக்கப்பட்ட காரணங்களால் வானிலையில் மாற்றம் ஏற்படுவது வழக்கம். நாடெங்கும் நகரமயமாதல் வேகமாக நடந்து வருவதால் மாசு அதிகமாகி, வெப்பநிலை உயா்ந்து வருகிறது. இது உலக அளவிலும் நடக்கிறது. சுற்றுச்சூழலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களால் தட்பவெப்பத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது’ என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT