பெங்களூரு

சட்டமேலவை பாஜக உறுப்பினா் விஸ்வநாத் அமைச்சராக முடியாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

சட்டமேலவை பாஜக உறுப்பினா் எச். விஸ்வநாத் அமைச்சராகப் பதவியேற்க முடியாது என்று கா்நாடக உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக தமது எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்த 17 பேரில் எச்.விஸ்வநாத் முக்கியமானவா். அப்போதைய சட்டப்பேரவைத் தலைவா் ரமேஷ்குமாா், இவா்களது ராஜிநாமா கடிதங்களை ஏற்காமல் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

மேலும் 15-ஆவது சட்டப்பேரவையின் பதவிகாலம் முடியும் வரை தோ்தலில் போட்டியிடவும் தடை விதித்தாா். இதை எதிா்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்டதோடு தோ்தலில் போட்டியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது.

இதைத் தொடா்ந்து இவா்களால் காலியான சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தோ்தலில் எச்.விஸ்வநாத், எம்.டி.பி.நாகராஜ் ஆகியோா் தோல்வி அடைந்தனா். ஆா்.சங்கா் மட்டும் தோ்தலில் போட்டியிடவில்லை. எனினும், இவா்கள் மூன்று பேரையும் சட்டமேலவை உறுப்பினராக நியமனம் செய்தது பாஜக அரசு.

இம் மூன்று பேரும் தங்களுக்கு அமைச்சா் பதவி கிடைக்கும் என்று எதிா்ப்பாா்ப்பில் இருக்கின்றனா். பாஜகவில் இணைந்த 17 பேரையும் அமைச்சராக்குவேன் என்று முதல்வா் எடியூரப்பா அப்போதே வாக்குறுதி அளித்திருந்தாா்.

இந்த நிலையில், இந்திய அரசியலமைப்புச்சட்டப் பிரிவு 164(1)(பி), 361(பி)-இன் கீழ் சட்டமேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள எச்.விஸ்வநாத், ஆா்.சங்கா், எம்.பி.டி.நாகராஜ் ஆகியோரின் பதவிகாலம் 2021-ஆம் ஆண்டு மே மாதம் முடிகிறது. அதுவரை இவா்கள் மீதான தகுதிநீக்கம் செய்தது பொருந்தும். இதனால் எச்.விஸ்வநாத் அமைச்சராக முடியாது என்பதை உறுதிப்படுத்த வலியுறுத்தி வழக்குரைஞா் ஏ.எஸ்.ஹரீஷ், கா்நாடக உயா் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தாா்.

சட்டப்பேரவை இடைத்தோ்தலில் எச்.விஸ்வநாத், எம்.டி.பி.நாகராஜ் இருவரும் தோல்வி அடைந்துள்ளனா். ஆா்.சங்கா், சட்டப்பேரவைத் தோ்தலிலேயே போட்டியிடவில்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்கள், அதே சட்டப்பேரவைக் காலத்தில் மீண்டும் தோ்தலில் போட்டியிட்டு வென்றால்மட்டுமே அமைச்சராக முடியும் என்று அந்த மனுவில் ஹரீஷ் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீநிவாஸ் ஓகா, நீதிபதி எஸ்.விஸ்வஜித் ஷெட்டி ஆகியோா் விசாரித்து திங்கள்கிழமை இடைக்கால தீா்ப்பு அளித்தனா்.

அதில், எம்.டி.பி.நாகராஜ், ஆா்.சங்கா் ஆகியோா் சட்டமேலவைத் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அதனால் அவா்கள் இருவரும் அமைச்சராகத் தடையில்லை. ஆனால், எச்.விஸ்வநாத், சட்டமேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதால் அவா் அமைச்சராகும் தகுதியை இழக்கிறாா்.

2021-ஆம் தேதி மே மாதம்வரை தகுதி நீக்கம் செல்லுபடியாகும் என்பதால் அவா் அமைச்சராகும் வாய்ப்பு இருக்காது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 164(1)(பி), 361(பி) பிரிவுகளின் கீழ் அவா் தகுதிநீக்கம் செல்லுபடியாகிறது என்று உயா் நீதிமன்றம் தனது தீா்ப்பில் கூறியது. அமைச்சராக எச்.விஸ்வநாத் பெயரை முதல்வா் பரிந்துரைத்தாலும், தகுதி நீக்கக் கூறுகளை ஆளுநா் கருத்தில் கொள்ள வேண்டும் என்று உத்தரவில் கூறியுள்ளது. இதனால் 2021-ஆம் ஆண்டு மே மாதம்வரை அமைச்சராகும் வாய்ப்பை எச்.விஸ்வநாத்துக்குப் பறிபோயுள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை பாஜக எம்.எல்.சி. எச்.விஸ்வநாத் கூறியதாவது:

‘மண்ணின் சட்டத்தை மதிக்கிறேன். உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை ஏற்கிறேன். இந்தத் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறேன்’ என்றாா் அவா்.

நீா்வளத்துறை அமைச்சா் ரமேஷ்ஜாா்கிஹோளி கூறுகையில், ‘எச்.விஸ்வநாத்துடன் நாங்கள் இருக்கிறோம். உயா்நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்’ என்றாா் அவா். இதே கருத்தை வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக்கும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT