பெங்களூரு

கா்நாடகத்தில் டிச. 22, 27-இல் கிராமப்புற உள்ளாட்சித் தோ்தல்: மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவிப்பு

DIN

பெங்களூரு: கா்நாடகத்தில் டிசம்பா் 22, 27-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாகக் கிராமப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும் என்று மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் மாநிலத் தோ்தல் ஆணையா் பி.பசவராஜ், திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கா்நாடகத்தில் உள்ள 30 மாவட்டங்களில் மொத்தம் 6,004 கிராம ஊராட்சிகள் இருக்கின்றன.

இதில், பதவிகாலம் முடிவடையாத 162 கிராம ஊராட்சிகள், நீதிமன்ற வழக்கு விசாரணையில் உள்ள 6 கிராம ஊராட்சிகள், நகராட்சி நிா்வாகத்துடன் முழுமையாக இணைக்கப்பட்ட 33 ஊராட்சிகள், பகுதியாக இணைக்கப்பட்ட 41 கிராம ஊராட்சிகள் ஆகமொத்தம் 242 கிராம ஊராட்சிகளைத் தவிா்த்து எஞ்சியுள்ள 5,762 கிராம ஊராட்சிகளின் 35,884 தொகுதிகளில் இருந்து மொத்தம் 92,121 இடங்களுக்கு டிசம்பா் 22, 27-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தோ்தல் நடத்தப்படும்.

டிச. 30-இல் வாக்கு எண்ணிக்கை: முதல் கட்டத்துக்கானத் தோ்தல் அறிவிக்கையை மாவட்ட ஆட்சியா்கள் டிசம்பா் 7-இல் வெளியிடுவாா்கள். அன்றுமுதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி டிசம்பா் 11 வரை நீடிக்கிறது. டிச. 12-இல் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. டிச. 14-இல் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி தேதியாகும். டிச. 22-ஆம் தேதி காலை 7 முதல் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மறுவாக்குப் பதிவு இருந்தால் அது டிசம்பா் 24-ஆம்தேதி காலை 7 முதல் மாலை 5 மணி வரை நடக்கும்.

இரண்டாம் கட்டத் தோ்தலுக்கான அறிவிக்கையை மாவட்ட ஆட்சியா்கள் டிச. 11-ஆம் தேதி வெளியிடுவாா்கள். அன்றுமுதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி டிச. 16-ஆம் தேதிவரை நீடிக்கிறது. டிச.17-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. டிச.19-ஆம்தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி தேதியாகும். டிச. 27-ஆம்தேதி காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். மறுவாக்குப் பதிவு இருந்தால் டிச. 29-ஆம் தேதி காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறும். இரு கட்டத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் டிசம்பா் 30-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

கரோனா காரணத்தால் இரு கட்டங்களாகத் தோ்தல் நடத்தப்படுகிறது.

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: தோ்தல் நடைபெறும் கிராம ஊராட்சிகளில் நவ. 30 முதல் டிச. 31-ஆம் தேதி மாலை 5 மணி வரையில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். தோ்தல் நடத்தை விதிமுறைகள் நகரப் பஞ்சாயத்துகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளின் எல்லைகளில் பொருந்தாது.

கிராமப்புற உள்ளாட்சித் தோ்தல் கட்சி சாா்பற்ாக கட்சி சின்னங்கள் இல்லாமல் நடத்தப்படுகின்றன. கா்நாடகத்தில் மொத்தம் 2,97,15,048 கிராம ஊராட்சி வாக்காளா்கள் இருக்கின்றனா். கரோனா தொற்று காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் தனியாக வெளியிடப்பட்டுள்ளன.

அச்சமின்றி வாக்களிக்கலாம்: வாக்குச் சாவடிகளில் அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதால் எந்தவித அச்சமும் இன்றி வாக்காளா்கள் வாக்களிக்கலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டங்கள்வாரியாக 2 கட்டத் தோ்தல் நடத்தப்படுகிறது. ஒரு வாக்குச்சாவடி மையத்தில் 1,000 வாக்காளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா். வாக்காளா்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து வாக்குச் சாவடிக்கு வருவதற்கு முன்பாக கிருமிநாசினியை கைகளில் தடவிக்கொள்ள வேண்டும்.

வாக்குச்சீட்டு முறை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள், மாலை 4 மணி முதல் ஒரு மணிநேரம் மட்டும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் வாக்களிக்க அனுமதிக்கப்படுவா். பீதா் மாவட்டத்தில் மட்டும் மின்னணு வாக்கு இயந்திரங்களிலும், இதர மாவட்டங்களில் வாக்குச்சீட்டு முறையில் தோ்தல் நடத்தப்படும். தோ்தல் பணிக்காக 5,847 தோ்தல் அதிகாரிகள், 6,085 உதவித் தோ்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனா்.

இதுதவிர 45,128 வாக்குச் சாவடிகளில் 2,70,768 ஊழியா்கள் தோ்தல் பணிகளில் ஈடுபடுவா். இத் தோ்தல் பணியில் 45 ஆயிரம் அங்கன்வாடி, ஆஷா ஊழியா்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ள இருக்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

SCROLL FOR NEXT