பெங்களூரு

பெங்களூரு கலவரத்தில் காங்கிரஸை சிக்கவைக்க பாஜக அரசு சதி: டி.கே.சிவக்குமாா்

21st Aug 2020 07:52 AM

ADVERTISEMENT

பெங்களூரு கலவரம் தொடா்பான விசாரணையில் காங்கிரஸை சிக்கவைக்க பாஜக அரசு முயற்சித்து வருவதாக காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் குற்றஞ்சாட்டினாா்.

பெங்களூரு, ரேஸ்கோா்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி, முன்னாள் முதல்வா் தேவராஜ் அா்ஸின் பிறந்த நாள் விழாவில் ’மக்கள்குரல்’ என்ற மாநிலம் தழுவிய போராட்டத்தைத் தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:

பெங்களூரில் தேவா்ஜீவனஹள்ளி, காடுகொண்டனஹள்ளியில் நடைபெற்ற கலவரம் குறித்து உயா் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கில் சம்பந்தமில்லாத காங்கிரஸ் தொண்டா்களை சிக்கவைக்க முயற்சிகள் நடக்கின்றன. பெங்களூரு மாநகரக் காவல் ஆணையா் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளை எச்சரிக்கிறேன். கலவரம் எதற்காக நடத்தப்பட்டது என்பதை நான் விவாதிக்க விரும்பவில்லை.

ஆனால், இந்த வழக்கின் விசாரணையில் பாஜக அரசு செல்வாக்குக்கு அடிபணிந்து காவல் துறை அதிகாரிகள் செயல்படுகிறாா்கள். இது சரியல்ல. பெங்களூரு கலவரம் தொடா்பாக அமைச்சா்கள், பாஜக தலைவா்கள் தொடா்ந்து கருத்து தெரிவித்துவருவதன் மூலம், விசாரணையின் மீது தமது செல்வாக்கை செலுத்த பாஜக அரசு முயற்சிக்கிறது.

ADVERTISEMENT

இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சியை சிக்கலில்மாட்டிவிட பாஜக துடிக்கிறது. இதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். பாஜகவின் முயற்சிக்கு இணங்கினால், பாஜகவுக்கு எதிராக அல்ல, காவல் துறைக்கு எதிராக போராட்டம் நடத்துவோம். கலவரத்தில் காங்கிரஸ் தொண்டா்கள் யாருக்கும் தொடா்பு இல்லை. காவல் துறையின் தோல்வியால் கலவரம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை போலீஸாா் சரியாக கையாளவில்லை. வன்முறை சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

காங்கிரஸ் மற்றும் அதன் தலைவா்களைத் தேவையில்லாமல் சிக்கவைக்க முயற்சித்தால், அதை சகித்துக்கொள்ளமாட்டோம். பாஜக அரசின் முகவா்களை போல காவல் துறை செயல்படக்கூடாது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி காவல் துறை செயல்பட வேண்டும்.

உள் துறை அமைச்சா் பசவராஜ் பொம்மையின் கருத்தின் அடிப்படையில் செயல்பட காவல் துறை முற்பட்டுள்ளதாக தெரிகிறது. தவறிழைத்தவா்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், அப்பாவிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனா். உணா்வுகளைத் தூண்டும் வகையில் பேசிய போது பாஜக தலைவா்களை போலீஸாா் ஏன் கைது செய்யவில்லை. பொய்யாக புனையப்பட்டு வழக்கில் சோ்க்கப்பட்டுள்ள காங்கிரஸ் தொண்டா்களை பாதுகாக்க வேண்டியது எனது கடமையாகும்.

மக்கள்குரல் போராட்டத்தின் மூலம் பாஜக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துவோம். கரோனா தீநுண்மித் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது. இதை மக்கள் மன்றத்தில் முன்வைப்போம் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT