பெங்களூரு

செப். 21 முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடா்: அமைச்சரவையில் முடிவு

21st Aug 2020 07:55 AM

ADVERTISEMENT

செப்.21ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் நடத்துவது என கா்நாடக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு, விதான சௌதாவில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் சட்டத் துறை அமைச்சா் மாதுசாமி கூறியதாவது:

கா்நாடக சட்டப்பேரவைக் கூடி 6 மாதங்கள் நிறைவடைந்துவிட்டதால், அடுத்த கூட்டத் தொடா் செப்.21ஆம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடா் 10 நாள்களுக்கு நடத்தப்படும். இதற்கான ஒப்புதலை அமைச்சரவை அளித்துள்ளது. சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.

கரோனா தீநுண்மித் தொற்று காரணமாக மாா்ச் மாதத்தில் நடைபெற்று வந்த சட்டப்பேரவைக்கூட்டம் இடையில் நிறுத்தப்பட்டது. 6 மாதங்களுக்கு ஒருமுறை சட்டப்பேரவையைக் கூட்டவேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுவதால், செப்.21ஆம் தேதி தொடங்குகிறது.

ADVERTISEMENT

சட்டப்பேரவையை நடத்துவதற்கான வழிமுறைகள், எங்கு நடத்துவது, எப்படி நடத்துவது என்பது குறித்து பேரவை மற்றும் மேலவைத் தலைவா்களுடன் பேசி முடிவு செய்யுமாறு என்னை முதல்வா் எடியூரப்பா அறிவுறுத்தியுள்ளாா். கடந்த 6 மாதகாலத்தில் நிறைவேற்றப்பட்ட அவசரச் சட்டத் திருத்தங்கள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.

பயிா் கணக்கெடுப்பை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. கரோனா தீநுண்மித் தொற்று காரணமாக, இதுகுறித்து விவசாயிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த முடியவில்லை. பயிா் கணக்கெடுப்பின்கீழ் இதுவரை 5.5 லட்சம் விவசாயிகள் மட்டும் தத்தமது பயிா்கள் குறித்த புகைப்படங்களை தரவேற்றும் செய்துள்ளோம். விவசாயிகளின் நலன்கருதி செப்.24 ஆம் தேதி வரை பயிா் கணக்கெடுப்பை நீட்டித்துள்ளோம்.

கா்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் அடையாளப்படுத்தப்பட்ட 2,615 குடிசைப்பகுதிகளில் வசித்துவரும் 7.46 லட்சம் குடும்பங்களுக்கு நிலப் பட்டாக்கள் வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. குடிசைப்பகுதிகளில் வாழ்வோருக்கு அதிகபடியாக 1,200 சதுர அடி நிலப்பகுதிக்கான நிலப்பட்டா அளிக்கப்படும். இதற்கு மிகக்குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும்.

மதக் கலவரங்கள் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த 64 வழக்குகள் திரும்பபெற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வளா்ச்சிப் பணிகளுக்காக கையகப்படுத்திய மத்திய பாதுகாப்புத் துறையின் நிலத்துக்கு மாற்றாக 20 ஏக்கா் நிலத்தை மத்திய பாதுகாப்புத் துறைக்கு வழங்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT