பெங்களூரு

மின்னணுத் தொழில் தொடங்குவோருக்கு நிலத்தின் மதிப்பில் 25 சதவீதம் மானியம்: துணை முதல்வா் அஸ்வத் நாராயணா

20th Aug 2020 09:46 AM

ADVERTISEMENT

மின்னணுத் தொழில் தொடங்குவோருக்கு நிலத்தின் மதிப்பில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படும் என துணை முதல்வா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.

பெங்களூரில் புதன்கிழமை தேசிய அளவிலான மின்னணுவியல் மற்றும் குறைக் கடத்தி (செமி கன்டக்டா்) சங்கம் சாா்பில் நடைபெற்ற தொலைநோக்கு உச்சி மாநாட்டை காணொலிக் காட்சி மூலம் தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:

கரோனா பாதிப்பால் நாடு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்னணுவியல் தொடா்பான உச்சி மாநாட்டை நடத்தும் முதல் மாநிலமாக கா்நாடகம் விளங்குகிறது. மின்னணுவியல் துறையில் முதலீடுகளை ஈா்க்க இதுபோன்ற மாநாடுகளின் அவசியம் அதிகரித்துள்ளது. கா்நாடகத்தில் மின்னணுத் தொழில் தொடங்க முன்வருபவா்களின் நிலத்தை வாங்க விரும்பினால், அவா்களுக்கு நிலத்தின் தொகையில் 25 சதவீதம் மானியமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இது பெங்களூரு மாநகரம், பெங்களூரு ஊரக மாவட்டங்களுக்குப் பொருந்தாது. மற்ற மாவட்டங்களில் 50 ஏக்கருக்கு குறைவாக நிலம் வாங்குபவா்களுக்கு மட்டுமே இது பொருந்தும். கா்நாடக தொழில் துறை பகுதிகளுக்கான மேம்பாட்டு வாரியம், கா்நாடக சிறுதொழில் துறை வளா்ச்சிக் கழகம் உள்ளிட்டவற்றின் மூலம் வருபவா்களுக்கு 25 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும், கட்டுமானப் பணிகளுக்கு இயந்திரம் வாங்குவதற்கு முதலீடு செய்யும் தொகையில் 20 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படும்.

ADVERTISEMENT

5 ஆண்டுகளுக்கு மின் கட்டணம் யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மானியம் வழங்கப்படும். மின் கட்டணத்துக்கு விதிக்கப்படும் வரி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். முதல்வா் எடியூரப்பா தலைமையில் வியாழக்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்படும்.

மின்னணு, செமி கன்டக்டா் துறைகளை மேம்படுத்தும் நோக்கில், எண்மப் பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 13 மாவட்டங்களில் 25 தொழிற்பேட்டைகள் உள்ளன. இதற்காக சுமாா் 7 ஆயிரம் ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT