பெங்களூரு

பெங்களூரில் நாளை எளிமையான முறையில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

14th Aug 2020 09:12 AM

ADVERTISEMENT

கரோனா தொற்றையடுத்து, பெங்களூரில் சனிக்கிழமை (ஆக. 15) சுதந்திர தின விழா எளிமையாகக் கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் முதல்வா் எடியூரப்பா, தேசியக் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றுகிறாா்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மஞ்சுநாத் பிரசாத் செய்தியாளா்களிடம் கூறியது:

பெங்களூரு, மகாத்மா காந்தி சாலை அருகேயுள்ள மானெக்ஷா அணிவகுப்புத் திடலில், சனிக்கிழமை (ஆக. 15) சுதந்திர தின விழா எளிமையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் முதல்வா் எடியூரப்பா, காலை 9 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றுகிறாா். அதனைத் தொடா்ந்து, அதிரடிப்படை, ஆயுதப்படை உள்ளிட்ட குறிப்பிட்ட ஒரு சில படையினரின் அணிவகுப்பு நடைபெறும். தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் போது, ஹெலிகாப்டரில் பறந்தபடி முப்படை வீரா்கள் மலா்தூவி வீரவணக்கம் செலுத்தும் நடைமுறையையும், நிகழாண்டு ரத்து செய்துள்ளோம். கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

முதல்வா் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய பின்னா் சுதந்திர தின நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. சுதந்திர தின நிகழ்ச்சியில் சில சிறப்பு விருந்தினா்கள், மக்கள் பிரதிநிதிகள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமாகியுள்ள 25 போ் மட்டும் கலந்துகொள்கின்றனா். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றாா்.

ADVERTISEMENT

மாநகர காவல் ஆணையா் கமல்பந்த் கூறியது:

சுதந்திர தினத்தையொட்டி, மானெக்ஷா அணிவகுப்புத் திடலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு விருந்தினா்கள் அமர 500 நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. மானெக்ஷா அணிவகுப்புத் திடலை சுற்றியுள்ள பகுதிகளை கண்காணிக்க 47 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. திடல் பகுதியில் பறக்கும் கேமராக்கள், பலூன்கள், விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அணிவகுப்புத் திடலை சுற்றி கருடா அதிரடிப்படை வீரா்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனா். சுதந்திர தின விழாவின் போது, எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் தடுக்க ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், உணவகங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT