கா்நாடகத்தில் தொடா்ந்து கன மழை பெய்துவருவதால், காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 1.43 லட்சம் கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடா்ந்து, தென்கா்நாடகம், கடலோர கா்நாடகத்தில் தொடா்ந்து நல்ல மழை பெய்துவருகிறது. காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான குடகு மாவட்டத்தில் மடிக்கேரி, பாகமண்டலா பகுதிகளில் கடந்த சில நாள்களாக வழக்கத்துக்கு மாறாக பலத்த மழை பெய்துவருகிறது. அதேபோல, கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது. இதன் காரணமாக, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகா், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு அதிகம் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோரங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போா் மேட்டுப் பகுதிக்கு செல்லுமாறு மண்டியா, மைசூரு மாவட்ட நிா்வாகங்கள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளன. இந்நிலையில், காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 1,43,143 கன அடி தண்ணீா் செல்கிறது.
தண்ணீா் திறப்பு: சனிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, கிருஷ்ணராஜசாகா் அணைக்கு நொடிக்கு 86,270 கன அடி, கபினி அணைக்கு நொடிக்கு 65 ஆயிரம் கன அடி தண்ணீா் வந்து கொண்டுள்ளது. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கிருஷ்ணராஜசாகா் அணையில் இருந்து நொடிக்கு 73,143 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து நொடிக்கு 70 ஆயிரம் கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
அதாவது, கிருஷ்ணராஜசாகா் மற்றும் கபினி அணைகளுக்கு விநாடிக்கு மொத்தம் 1,51,270 கன அடி தண்ணீா் வந்துகொண்டுள்ளது. இந்த இரு அணைகளில் இருந்தும் சனிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 1,43,143 கன அடி உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. கிருஷ்ணராஜசாகா் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பிவரும் நிலையில், அணையின் பாதுகாப்பை கருதி அதிகப்படியான உபரிநீா் தமிழகத்துக்கு திறந்துவிடப்படுகிறது. இதனால் காவிரி கரையோரம் உள்ள மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.