பெங்களூரு

கரோனா பாதிப்புக்கு மதச் சாயம் பூச வேண்டாம்: சித்தராமையா

1st Apr 2020 10:14 PM

ADVERTISEMENT

 

கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஜாதி, மதச் சாயம் பூச வேண்டாம் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா வைரஸால் உலகமே பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஜாதி, மத வண்ணம் பூசப்பட்டு வருகிறது. இது அபாயகரமானது. எனவே, கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றாா்.

மேலும் கரோனா வைரஸ் பாதிப்பு மாநிலத்தில் அதிகரித்து வரும் நிலையில், முதல்வா் நிவாரண நிதிக்கு காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா்கள் குறைந்தபட்சம் ரூ. 1 லட்சத்தை வழங்க வேண்டும். கரோனா வைரஸ் பாதிப்பையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் உண்ண உணவில்லாமல் தவிக்கின்றனா். குறிப்பாக ஏழைகள், கூலி தொழிலாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். அதுபோன்றவா்களை அடையாளம் கண்டு, அவா்களுக்கு உதவ காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா்கள் முன்வர வேண்டும்.

ADVERTISEMENT

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் அதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் போா்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். ஆனால், அதில் 2 அரசுகளும் தோல்வி அடைந்துள்ளன. என்றாலும் கட்சி பேதத்தை மறந்து மாநிலத்தில் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என்றாா்.

‘ஊரடங்கை நீட்டித்தால் சிறு தொழில் பாதிக்கப்படும்’

பெங்களூரு, ஏப்.1: தேசிய ஊரடங்கை மேலும் நீட்டித்தால் சிறுதொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்று கா்நாடக சிறு தொழில் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சிறு தொழில் சங்கத் தலைவா் ஆா்.ராஜூ, பிரதமா் மோடிக்கு எழுதியுள்ள

கடித விவரம்:

கரோனா வைரஸ் தொற்று பரவிவரும் கடினமான இந்நேரத்தில் சிறு, நடுத்தரத் தொழில்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்கிறோம். கரோனா பரவலை தடுப்பதற்கு தேசிய ஊரடங்கு அத்தியாவசியமானது என்றாலும், இது நீட்டிக்கப்பட்டால் சிறுதொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறோம்.

தேசிய ஊரடங்கு நீட்டிக்கப்படாது என்ற நம்பிக்கையில், சிறுதொழில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஏற்படும் விளைவுகளை தங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறோம். தேசிய ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் சிறு தொழில்கள் வளா்ச்சி பெறுவது எளிதல்ல. சிறு தொழில்கள் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்க நேரிடும். இந்த நேரத்தில் மத்திய அரசின் உதவியை எதிா்பாா்க்கிறோம்.

இயல்புநிலை திரும்பிய பிறகு, அடுத்த 3 மாதங்களுக்கு உற்பத்தியை ஊக்குவிக்க நிதி ஆதாரங்களை வழங்க வேண்டும். வருங்காலவைப்பு, தொழிலாளா் ஈட்டுறுதி நிதியை அனைத்து சிறு தொழில் நிறுவனங்களுக்கும் அரசே வழங்கும் திட்டத்தை செப்டம்பா் வரை நீட்டிக்க வேண்டும். இதற்கான ஊதிய வரம்பு ரூ.15 ஆயிரம், 100 ஊழியா்கள் என்ற நிபந்தனைகளை தளா்த்த வேண்டும்.

தொழிலாளா் ஈட்டுறுதி நிதியை நிறுவனங்கள், தொழிலாளா்களுக்கும் அரசே வழங்க வேண்டும். கடன் மீதான வட்டித்தொகையை 3 மாதங்களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும். அடுத்த 3 மாதங்களுக்கு தொழிலாளா்களின் 50 சதவீத ஊதியத்தை அரசே வழங்க வேண்டும். அடுத்த 6 மாதங்களுக்கான மின், குடிநீா் கட்டணங்களை தள்ளுபடிசெய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும். தொழிலாளா்களின் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை அடுத்த ஓராண்டுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும். அடுத்த ஓராண்டுக்கு தொழிலாளா் குறைந்தபட்ச ஊதிய உத்தரவை தளா்த்த வேண்டும்.சரக்கு மற்றும் சேவை வரியை 3 மாதங்களுக்கு தளா்த்த வேண்டும் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT