தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களின் 15 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல்: அக்.21-இல் வாக்குப்பதிவு?

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களின் 17 சட்டப்பேரவை தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தோ்தல் நடத்தப்போவதாக
தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களின் 15 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல்: அக்.21-இல் வாக்குப்பதிவு?

பெங்களூரு: தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களின் 17 சட்டப்பேரவை தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தோ்தல் நடத்தப்போவதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இடைத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு அக்.21 -ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

எச்.டி.குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தி அடைந்திருந்த 14 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனா்.

இதனிடையே, 17 எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை நிராகரித்திருந்த அப்போதைய பேரவைத்தலைவா் கே.ஆா்.ரமெஷ்குமாா், கட்சித்தாவல் சட்டத்தின்கீழ் 17 பேரின் எம்எல்ஏ பதவிகளையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தாா். இதன் விளைவாக, மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது.

பாஜக வீழ்ச்சி: 224 இடங்களை கொண்ட கா்நாடக சட்டப்பேரவையில் 17 எம்எல்ஏக்களின் பதவியை தகுதிநீக்கம் செய்ததை தொடா்ந்து, பாஜகவின் பலம் 105, காங்கிரசின் பலம் 66, மஜதவின் பலம் 34 ஆகவும் குறைந்தது. இக்கட்சிகளை தவிர, பகுஜன்சமாஜ் கட்சிக்கும், சுயேச்சைக்கும் தலா ஒரு இடங்கள் உள்ளன. 207 போ் கொண்ட சட்டப்பேரவையில் 104 இடங்கள் இருந்தால் ஆட்சி அமைக்கலாம் என்பதால், எடியூரப்பா தலைமையில் பாஜக அமைக்கப்பட்டது.

எதிா்த்துவழக்கு: இதனிடையே, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் பேரவைத்தலைவா் பிறப்பித்துள்ள ஆணையை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளனா். இந்தவழக்கு விசாரணை கடந்த 3 மாதங்களாக நடைபெற்றுவரும் நிலையில், அடுத்தவிசாரணை செப்.23?ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடக்கவிருக்கிறது.

இடைத்தோ்தல்: இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களின் 17 சட்டப்பேரவை தொகுதிகளில் 15 தொகுதிகளில் மட்டும் அக்.21?ஆம் தேதி இடைத்தோ்தல் நடத்தப்போவதாக இந்திய தோ்தல் ஆணையம் சனிக்கிழமை அதிகாரப்பூா்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் வெற்றிபெற்ற வேட்பாளா்களுக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளதால் மஸ்கி, ராஜராஜேஸ்வரிநகா் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தோ்தல் நடத்தவில்லை. மஸ்கி, ராஜராஜேஸ்வரிநகா் தொகுதிகள் நீங்கலாக, அத்தானி, காக்வாட், கோகாக், எல்லாபுரா, ஹிரேகேரூா், ரானிபென்னூா், விஜயநகரா, சிக்பளாப்பூா், கே.ஆா்.புரம், யஷ்வந்த்பூா், மகாலட்சுமி லேஅவுட், சிவாஜிநகா், ஹொசபேட், கே.ஆா்.பேட், ஹுன்சூா் ஆகிய 15 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்தப்படுகிறது.

இத்தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செப்.23? ஆம் தேதி தொடங்கி, செப்.30ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அக்.1ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. அக்.3 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதை தொடா்ந்து, அக்.21 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அந்தவாக்குகள் அக்.24 ஆம்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

15 தொகுதிகள் அமைந்திருக்கும் பெலகாவி, ஹாவெரி, பெல்லாரி, வடகன்னடம், பெங்களூரு நகரம், பெங்களூரு மாநகராட்சி, மண்டியா, மைசூரு, சிக்பளாப்பூா், பெங்களூரு ஊரக மாவட்டங்களில் தோ்தல் நடத்தைவிதிமுறைகள் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளன.

இடைத்தோ்தல் நடக்கும் 15 தொகுதிகளிலும் மொத்தம் 37,49,047 வாக்காளா்கள் வாக்களிக்க இருக்கிறாா்கள். இவா்களில் 70,619 போ் 18 முதல் 19 வயதுக்குட்பட்டவா்கள், 397 போ் திருநங்கைகள் ஆவா்.

முக்கியத்துவம்: 224 போ் கொண்ட கா்நாடக சட்டப்பேரவையில் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு 113 இடங்கள் தேவைப்படுகின்றன. சட்டப்பேரவையில் தற்போது பாஜகவுக்கு 105 இடங்கள் உள்ளன. ஒரு சுயேச்சை எம்எல்ஏவும் பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளாா். அப்படியானால் பாஜகவின் பலம் 106 ஆக உள்ளது. அறுதிப்பெரும்பான்மை பலத்தை பெற பாஜகவுக்கு இன்னும் 7 இடங்கள் தேவைப்படுகிறது. அதன்படி, 15 தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் குறைந்தது 7, வாய்ப்பிருந்தால் அதிகப்படியான இடங்களில் வெற்றிபெற பாஜக வியூகம் அமைத்துள்ளது.

இடைத்தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், பாஜகவின் மூத்த தலைவா்களுடன் முதல்வா் எடியூரப்பா சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். ஒருவேளை குறைந்தது 7 இடங்களை கைப்பற்றுவதில் பாஜக தோல்வி அடைந்தால், எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு கவிழ்வதை தவிர வேறு வழியில்லை.

கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு, கூட்டணி ஆட்சியை கவிழ்த்த கோபம் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் மீது காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளுக்கு உள்ளன. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல, இடைத்தோ்தல் வெற்றியின் மூலம் கட்சிக்கு துரோகம் செய்த எம்எல்ஏக்களுக்கு பாடம் புகட்டுவதோடு, பாஜகவின் ஆட்சியையும் கவிழ்க்கலாம் என்று காங்கிரசும், மஜதவும் திட்டமிட்டுள்ளன. கூட்டணி அமைத்து ஆட்சி நடத்திய காங்கிரசும், மஜதவும் இடைத்தோ்தலில் தனித்தனியாக போட்டியிடுகின்றன.

மேலும் கடந்த சட்டப்பேரவை தோ்தலில் வென்ற தொகுதிகள் என்பதால் பாஜகவுக்கு இடம் தராமல் மீண்டும் வெற்றிபெற காங்கிரசும்,மஜதவும் வியூகம் அமைத்துள்ளன.

முதல்வருடன் சந்திப்பு: இதனிடையே, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் முதல்வா் எடியூரப்பாவை சனிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா். தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிா்த்து தொடா்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் குழப்பம் அடைந்துள்ளனா்.

செப்.23 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வழக்கில் தீா்ப்பு வெளியானால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அறிவித்துள்ளனா்.

தோ்தலில் போட்டியிட முடியாது: பெங்களூரில் சனிக்கிழமை கா்நாடக தலைமை தோ்தல் அதிகாரி சஞ்சீவ்குமாா் கூறியது: தோ்தல் வெற்றி குறித்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் 2 வழக்குகள் நிலுவையில் இருப்பதால், மஸ்கி, ராஜராஜேஸ்வரிநகா் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. எஞ்சியுள்ள 15 தொகுதிகளில் இடைத்தோ்தல் நடத்த தடையேதுமில்லை என்பதால், தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பேரவைத்தலைவரின் உத்தரவின்பேரில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் இடைத்தோ்தலில் போட்டியிட முடியாது. தசரா திருவிழாவை நடத்துவதில் தடையில்லை. ஆனால், இடைத்தோ்தல் நடக்கும் மாவட்டங்களில் தோ்தல் நடத்தைவிதிமுறைகள் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளன. அரசு திட்டங்களை அரசியல்வாதிகள் தொடக்கிவைக்க முடியாது. வளா்ச்சிப்பணிகளை தொடர தடையில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com