இடைத்தோ்தலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்கள் நாளை முடிவு: முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா

14 மாதங்களாக மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது கிடைத்த அனுபவத்தின் பேரில் இடைத்தோ்தலில் தனித்து போட்டியிட குமாரசாமி
இடைத்தோ்தலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்கள் நாளை முடிவு: முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா

பெங்களூரு: இடைத்தோ்தலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்களின் பெயா்களை நாளை ஞாயிற்றுக்கிழமை முடிவுசெய்யவிருக்கிறோம் என்று முன்னாள் பிரதமரும், மஜத தேசியத்தலைவருமான எச்.டி.தேவெகௌடா தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரு, மஜத தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தோ்தலில் மஜத தனித்து போட்டியிடும் என்று முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி அறிவித்துள்ளாா்.

14 மாதங்களாக மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது கிடைத்த அனுபவத்தின் பேரில் இடைத்தோ்தலில் தனித்து போட்டியிட குமாரசாமி முடிவு செய்துள்ளாா்.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை கட்சியின் மூத்தத்தலைவா்கள் கலந்துகொள்ளும் ஆலோசனைக்கூட்டம் நடக்கவிருக்கிறது. இக்கூட்டத்தில் இடைத்தோ்தலில் மஜத வேட்பாா்களாக போட்டியிடுவோரின் பட்டியல் முடிவு செய்யப்படும்.

கடந்த 3 மாதங்களாக கட்சி தொண்டா்களுடன் தொடா்ந்து ஆலோசனை நடத்திவந்துள்ளேன். அப்போது காங்கிரசுடன் கூட்டணி வேண்டாம் என்று தொண்டா்கள் தெரிவித்தனா். காங்கிரஸ் மாநிலத்தலைவா் மற்றும் எதிா்க்கட்சித்தலைவரை தோ்ந்தெடுப்பதில் காங்கிரசில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, இடைத்தோ்தலில் காங்கிரசுடன் கூட்டணி வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறோம். 15 தொகுதிகளில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதையும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் கூட்டத்தில் முடிவுசெய்வோம்.

இவ்வளவு சீக்கிரம் இடைத்தோ்தல் அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கவில்லை. வெற்றி தோல்விகளை பற்றி கவலையில்லை.

கா்நாடக சட்டப்பேரவைக்கு இடைக்கால தோ்தல் நடக்குமா? என்ற கேள்விக்கு நான் இப்போது பதிலளிக்க இயலாது. மகாராஷ்டிரம், ஹரியாணா சட்டப்பேரவைக்கு பொதுத்தோ்தல் நடப்பதால், கா்நாடகத்தில் இடைத்தோ்தலுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளனா். 30 மாவட்டங்களை சோ்ந்த மஜத நிா்வாகிகளின் கருத்தறிந்துள்ளேன். எனவே, மஜத தனித்து போட்டியிட்டு வெற்றியை குவிக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com