பெங்களூரு

மேயர், துணை மேயர் தேர்தல்: பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தை கைப்பற்ற பாஜக வியூகம்

17th Sep 2019 09:57 AM

ADVERTISEMENT

பெங்களூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் வரும் செப். 27ஆம் தேதி நடைபெற உள்ளதையடுத்து, பெங்களூரு மாநகராட்சியின் நிர்வாகத்தை காங்கிரஸ்-மஜத கூட்டணியிடம் இருந்து கைப்பற்ற பாஜக வியூகம் அமைத்துள்ளது.
 பெங்களூரு மாநகராட்சியின் மேயர், துணை மேயர் பதவி ஓராண்டு காலத்துக்கு உரியதாகும். பெங்களூரு மாநகராட்சியின் 198 வார்டுகளுக்கு 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பாஜக-100, காங்கிரஸ்- 76, மஜத-14, சுயேச்சைகள்-8 வார்டுகளில் வெற்றிபெற்றிருந்தனர்.
 இடைத்தேர்தலில் பாஜகவின் பலம் 101-ஆக உயர்ந்து, சுயேச்சைகளின் எண்ணிக்கை 7-ஆக குறைந்தது.
 2015, 2016, 2017, 2018-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மேயர், துணை மேயர் தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி அமைத்து, மேயர், துணை மேயர் பதவிகளை தொடர்ந்து கைப்பற்றி வந்துள்ளது. 2015-16-இல் மேயராக காங்கிரஸின் மஞ்சுநாத் ரெட்டி, துணை மேயராக மஜதவின் ஹேமலதா; 2016-17-இல் மேயராக காங்கிரஸின் ஜி.பத்மாவதி, துணை மேயராக மஜதவின் எம்.ஆனந்த்; 2017-18-இல் மேயராக காங்கிரஸின் ஆர்.சம்பத்ராஜ், துணை மேயராக மஜதவின் பத்மாவதி நரசிம்மமூர்த்தி ஆகியோர் பதவி வகித்தனர்.
 2018-19-இல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸின் கங்காம்பிகே, துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட மஜதவின் பத்ரே கெளடா ஆகியோரின் பதவிக் காலம் செப். 27-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
 இதைத் தொடர்ந்து, பெங்களூரு மாநகராட்சியின் 2019-20-ஆம் ஆண்டுக்கான மேயர், துணை மேயர் தேர்தல் செப். 27-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 11 மணிக்கு நடைபெறும் தேர்தலில் மேயர், துணை மேயர் பதவிகள் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
 வாக்காளர்கள்: 198 மாமன்ற உறுப்பினர்கள் தவிர, பெங்களூரு நகர மாவட்டத்தில் வசிக்கும் எம்.பி.க்கள்(மக்களவை, மாநிலங்களவை), எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்களும் பெங்களூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமைபெற்றவர்கள் ஆவர்.
 அதன்படி, மேயர், துணை மேயர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் மொத்தம் 257 பேர். இத்தேர்தலில் வெற்றிபெற குறைந்தது 129 வாக்குகள் தேவைப்படுகின்றன.
 இந்நிலையில், 257-இல் சுயேச்சைகள் 7 பேரின் வாக்குகள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க உள்ளன. கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற தேர்தல்களில் சுயேச்சைகள் அனைவரும் காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு ஆதரவளித்து வந்தனர். தற்போதைய நிலையில், பாஜகவுக்கு 125, காங்கிரஸுக்கு 104, மஜதவுக்கு 21 வாக்குகள் உள்ளன. காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி அமைக்காத பட்சத்தில், சுயேச்சைகளின் ஆதரவு கிடைத்தால் பாஜக வெற்றிபெறுவது எளிதாகும்.
 கடந்த ஓராண்டு காலமாக மாநில அளவில் கூட்டணி அமைத்திருந்த காங்கிரஸும், மஜதவும் அண்மையில் பிரிந்துவிட்டன. மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பெங்களூரு மாநகராட்சியை கைப்பற்ற பாஜக வியூகம் அமைத்துள்ளது.
 2020-ஆம் ஆண்டு பெங்களூரு மாநகராட்சியின் தேர்தல் நடக்க இருப்பதால், நிகழாண்டில் மாநகராட்சியின் நிர்வாகத்தை தன் வசப்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
 யாருக்கு வாய்ப்பு: மேயர் மற்றும் துணை மேயர் பதவிகள் பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அப் பதவிகளை கைப்பற்றுவதில் பாஜகவில் கடும் போட்டி காணப்படுகிறது. மேயர் பதவியைக் கைப்பற்ற பாஜகவின் மாமன்ற உறுப்பினர்கள் பத்மநாப ரெட்டி, கே.ஏ.முனீந்திரகுமார், எல்.சீனிவாஸ், எம்.வெங்கடேஷ், கெளதம்குமார், ஜே.மஞ்சுநாத் ராஜு, மோகன்குமார், கே.உமேஷ் ஷெட்டி ஆகியோர் இடையே தீவிரமான போட்டி ஏற்பட்டுள்ளது.
 அதேபோல, துணை மேயர் பதவியைக் கைப்பற்ற பாஜகவின் மாமன்ற உறுப்பினர்கள் பிரமிளா ஆனந்த், ஏ.கோதண்ட ரெட்டி, சசிரேகா ஜெயராம் ஆகியோர் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
 இதனிடையே, தனது தொகுதிக்குள்பட்ட மாமன்ற உறுப்பினர்களில் ஒருவரை மேயர் அல்லது துணை மேயராக்க துணை முதல்வர் அஸ்வத்நாராயணா, அமைச்சர் ஆர்.அசோக், எம்.எல்.ஏ.க்கள் சதீஷ் ரெட்டி, எஸ்.ஆர்.விஸ்வநாத் ஆகியோர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
 காங்கிரஸ் சார்பில் மேயர் பதவிக்கு எம்.கே.குணசேகர், எம்.சிவராஜு இருவரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 வாக்குவிவரங்கள்
 மொத்த வாக்குகள் 257
 வெற்றிபெற தேவையான வாக்குகள் 129
 பாஜக: மாமன்ற உறுப்பினர்கள்-101, எம்.எல்.ஏ.க்கள்-11,
 எம்.எல்.சி.க்கள்-7, மக்களவை எம்.பி.-1, மாநிலங்களவை எம்.பி.-2, மொத்தம்-125.
 காங்கிரஸ்: மாமன்ற உறுப்பினர்கள்-76, எம்.எல்.ஏ.க்கள்-11, எம்.எல்.சி.க்கள்-10, மக்களவை எம்.பி.-1, மாநிலங்களவை எம்.பி.-6, மொத்தம்-104.
 மஜத: மாமன்ற உறுப்பினர்கள்-14, எம்.எல்.ஏ.க்கள்-1, எம்.எல்.சி.க்கள்-5, மாநிலங்களவை எம்.பி.-1, மொத்தம்-21.
 சுயேச்சைகள்: 7
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT