தசரா திருவிழாவில் தமிழர் மரபுக் கலை நிகழ்ச்சியை நடத்த கர்நாடக அரசு வாய்ப்பளித்துள்ளது.
மைசூரு தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் மைசூரில் உள்ள சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை சங்கத் தலைவர் கு.புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. சங்கச் செயலர் வெ.ரகுபதி அனைவரையும் வரவேற்றார். சங்கப் பொருளாளர் கடலாடி எஸ்.துரை, சங்கத்தின் வரவு-செலவு கணக்குகளை தாக்கல் செய்தார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மைசூரில் நடக்க இருக்கும் தசரா திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கர்நாடகா அரசின் தசரா விழாக் குழுவினர் மைசூரு தமிழ்ச் சங்கத்தை அழைத்திருந்தார்கள். மேலும், கர்நாடக அரசின் அழைப்பை ஏற்று உணவு திருவிழா நிகழ்ச்சியில் மைசூரு தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சைவ மற்றும் அசைவ உணவுகளை பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தசரா திருவிழா தொடக்க விழாவின் போது, உணவுத் திருவிழா நடைபெறும் இடத்தில் தமிழகக் கலைஞர்களைக் கொண்டு தமிழர்களின் மரபுக் கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், காளை ஆட்டம், பறையாட்டம், புலி ஆட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
செப். 30-ஆம் தேதி தமிழர் மரபுக் கலைகளை மேடை நிகழ்ச்சியாகவும் நடத்த தீர்மானிக்கப்பட்டது. மைசூரு தமிழ்ச் சங்கம் 43-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை தொடர்ந்து, நிகழாண்டில் பல புதிய திட்டங்களை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது. சங்கத்தில் பாதுகாவலர் உறுப்பினர்களை அதிகப்படுத்த உலகத் தமிழர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.