பெங்களூரு

எடியூரப்பாவை முதல்வராக்குவதில் பாஜகவுக்கு விருப்பம் இருக்கவில்லை

10th Sep 2019 10:29 AM

ADVERTISEMENT

எடியூரப்பாவை முதல்வராக்குவதில் பாஜகவுக்கு விருப்பம் இருக்கவில்லை என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு வாய்ப்பு வந்தபோது, எடியூரப்பாவை முதல்வராக்க அந்தக் கட்சிக்கு விருப்பம் இருந்திருக்கவில்லை.  மக்களின் ஆதரவு இல்லாமல், எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுள்ளது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானதாகும். 
சட்டப்பேரவையில் 113 எம்எல்ஏக்களைப் பெற்றிருந்தால் மட்டுமே தனித்து ஆட்சி அமைக்க முடியும். பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அந்தக் கட்சி எப்படி ஆட்சி அமைத்துள்ளது? மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்திருந்தால், எடியூரப்பா முதல்வராவதில்  ஆட்சேபம் எதுவுமில்லை. 
பிரதமர் நரேந்திர மோடியை போல அல்லாமல், தேர்தலில் மக்களின் தீர்ப்பு இல்லாமல் எடியூரப்பா முதல்வராகியிருக்கிறார். எத்தனை நாள்களுக்கு எடியூரப்பா முதல்வராக நீடிப்பார் என்பது தெரியவில்லை.
முதல்வராகப் பதவியேற்றது முதல் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்வதும், அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதும்தான் எடியூரப்பாவின் வேலையாக உள்ளது. இதை தவிர எடியூரப்பா வேறு ஏதாவது செய்திருக்கிறாரா?  
வெள்ள நிவாரண உதவி சரியாக வழங்கவில்லை: வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு வெள்ள நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. இது போன்ற அரசியலில் ஈடுபட்டால் மக்கள் பாஜகவை மன்னிக்க மாட்டார்கள். 
எடியூரப்பாவின் பழிவாங்கும் அரசியல்: முதல்வராகப் பதவியேற்ற முதல்நாளில் பேட்டி அளித்த எடியூரப்பா,  "பழிவாங்கும் அரசியலில் தான் ஈடுபடப்போவதில்லை' என்று கூறியிருந்தார். தான் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடப்போவதை தான் அப்படி குறிப்பிட்டிருந்தார் போலும். மக்களிடம் பேசும்போது தான் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று கூறிவிட்டு, அதையே முழுநேரமும் செய்துகொண்டிருக்கிறார். ஏதாவது ஊழல் அல்லது முறைகேடுகள் இருந்தால் அது குறித்துவிசாரித்து, குற்றவாளிகள் தண்டிக்க வேண்டுமென்பது உண்மைதான். 
வேளாண்பாக்கியா திட்டத்தில் ரூ.921 கோடியில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அது குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவதாகவும் முதல்வர் எடியூரப்பா அறிவித்திருக்கிறார். ஆண்டு முழுவதும் வேளாண்பணிகள் நடக்கவேண்டுமென்பதும், விவசாயிகளுக்கு நிலையான வருமானம்கிடைக்கவேண்டும் என்பதும் தான் அந்தத் திட்டத்தின்நோக்கம். 
நளின்குமார் கட்டீலுக்குக் கண்டனம்: முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு எதிராக வழக்கு தொடுக்க சித்தராமையாவே காரணம் என்று பாஜக மாநிலத்தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். 
வருமானவரித்துறையும், அமலாக்க இயக்குநரகமும் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளன. அரசியல்ரீதியான களங்கத்தை ஏற்படுத்த இது போன்ற கருத்துகளை அவர் கூறியிருக்கிறார். 
அடிப்படை அறிவில்லாத, புரிதல் இல்லாதவரை எப்படி மாநிலத்தலைவராக்கியது பாஜக என்று ஆச்சரியமாக உள்ளது. நாட்டை பற்றியும், மாநில அரசியல்பற்றியும் தெரியாதவர் பாஜகவின் மாநிலத்தலைவராக உள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்குப் பதிலாக காகித வாக்குச்சீட்டுமுறையை கொண்டுவர வேண்டும் என்றார் அவர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT