பெங்களூரு

கர்நாடகத்தில் மீண்டும் "ஆபரேஷன் தாமரை'?

7th Sep 2019 10:03 AM

ADVERTISEMENT

கர்நாடகத்தில் மீண்டும் "ஆபரேஷன் தாமரை' திட்டத்தை செயல்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
2018ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் கிடைக்காததால், மஜதவும் காங்கிரஸ் கூட்டணிசேர்ந்து ஆட்சி அமைத்தன. 224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் அப்போது 105 இடங்களில்வென்று பாஜக தனிப்பெரும் கட்சியாக இருந்தது. 
ஆனால், ஆட்சி அமைக்க குறைந்தது 113 இடங்கள் தேவைப்பட்டது. 9 எம்எல்ஏக்கள் குறைவாக இருந்ததால் ஆட்சி அமைக்க இயலாத நிலையை நினைத்துவருந்திய அப்போதைய பாஜக மாநிலத்தலைவர் எடியூரப்பா, மஜத காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க 6 முறைகள் முயற்சிமேற்கொள்ளப்பட்டது. கடந்த மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் உள்ள 28 இடங்களில் 25 இடங்களை பாஜக கைப்பற்றியிருந்தது. 
தேசிய அளவிலும் பிரதமர் மோடியில் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கப்பட்டது. இதன்பின்னணியில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுக்க 2008ஆம் ஆண்டு அப்போதைய பாஜக அரசின் முதல்வர் எடியூரப்பா கையாண்ட "ஆபரேஷன் தாமரை' திட்டத்தை கர்நாடக பாஜக மீண்டும் கையாண்டது. அதற்கு கைமேல் பலனாக 14 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்தது. மஜத காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக அதிருப்தி அடைந்திருந்த 17 எம்எல்ஏக்களும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனர். இந்த 17 பேரையும் அப்போதைய பேரவைத்தலைவர் ரமேஷ்குமார் தகுதிநீக்கம் செய்தார். 
இதனால், கர்நாடக சட்டப்பேரவையின் பலம் 207 ஆக குறைந்தது. இதனிடையே, மஜத காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்ததால், எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. கர்நாடகசட்டப்பேரவையில் தற்போது பாஜகவுக்கு 106, காங்கிரசுக்கு 66, மஜதவுக்கு 34 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதன்படி பார்த்தால், பாஜக ஆட்சி அடுத்த மூன்றரை ஆண்டுகால பதவியை நிறைவுசெய்யவேண்டுமானால், 17 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் குறைந்தது 8 இடங்களில் வெற்றிபெற வேண்டும். இது சாத்தியமாகாவிடில் ஆட்சிக் கவிழும் அபாயம் உள்ளது. 
இதை தடுக்கும் பொருட்டு, காங்கிரஸ், மஜதவில் அதிருப்தி அடைந்துள்ள எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வலைவீச பாஜக திட்டமிட்டுள்ளது. 
இதற்காக "ஆபரேஷன் தாமரை' திட்டத்தை மீண்டும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ், மஜதவில் இருந்துவிலகி பாஜகவுக்கு தாவ எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மஜதவை சேர்ந்த ஜி.டி.தேவெகெளடா(சாமுண்டீஸ்வரி தொகுதி), ரவீந்திர ஸ்ரீகண்டையா(ஸ்ரீரங்கப்பட்டணா), சுரேஷ்கெளடா(நாகமங்களா), டி.சி.கெளரிசங்கர்(தும்கூரு), நானகெளடா கண்ட்கூர்(குர்மிட்கல்), எச்.கே.குமாரசாமி(சக்லேஸ்பூர்), காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.நாகேந்திரா(பெல்லாரி ஊரகம்), பீமாநாயக்(ஹகரி பொம்மனஹள்ளி)ஆகிய 8 எம்எல்ஏக்களை தொடர்புகொண்டு பாஜக பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரியவந்துள்ளது. 
அக்.8ஆம் தேதியுடன் தசரா திருவிழா நிறைவுபெறவிருக்கிறது. அதன்பிறகு, பாஜகவுக்கு தாவ 10க்கும் மேற்பட்ட காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT