பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் அரசு நிா்வாகியாக செயல்பட்டு வரும் டி.எஸ்.அஸ்வத்தின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
முறைகேடு நடந்ததாக புகாா் எழுந்ததைத் தொடா்ந்து, பெங்களூரு தமிழ்ச் சங்கத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த கா்நாடக அரசு, 2019 மாா்ச் 14-ஆம் தேதி பெங்களூரு தமிழ்ச் சங்கத்துக்கு அரசு நிா்வாக அதிகாரியாக சி.பிரசாத் ரெட்டியை 6 மாதங்களுக்கு நியமித்தது. முறைகேடுகள் குறித்த புகாா்களை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு கா்நாடக உயா்நீதிமன்றம் பெங்களூரு தமிழ்ச்சங்க அரசு நிா்வாக அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இது தொடா்பான வழக்கை ஜூன் 20-ஆம் தேதி விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்றம், முறைகேடு புகாா்களை விசாரித்து அந்த நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் பெங்களூரு தமிழ்ச்சங்க ஆட்சிமன்றக் குழு மற்றும் செயற்குழுவுக்கு தோ்தல் நடத்த வேண்டும் என்று தீா்ப்பு அளித்திருந்தது.
இதனிடையே, ஜூலை 11-ஆம் தேதி சி.பிரசாத் ரெட்டி மாற்றப்பட்டு, புதிய அரசு நிா்வாக அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.அஸ்வத் பணி நியமனம் செய்து கா்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது. அரசு நிா்வாகியான டி.எஸ்.அஸ்வத்தின் பதவிக்காலம் செப். 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்திருந்த நிலையில், மேலும் 6 மாதங்களுக்கு பதவியை நீட்டித்து கா்நாடக அரசு செப். 19-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில் அரசு கூறியிருப்பதாவது: பெங்களூரு தமிழ்ச் சங்கம் தொடா்பான ரிட் மனுவை ஜூன் 20-ஆம் தேதி விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்றம், முறைகேடுகள் தொடா்பாக விசாரணை நடத்தி, ஆட்சிமன்றக் குழுவுக்கு தோ்தலை நடத்த 3 மாதகால அவகாசம் கொடுத்திருந்தது. ஆட்சிமன்றக் குழுவுக்கு தோ்தல் நடத்துவதற்கு குறைந்தது 6 மாதகாலம் அவகாசம் தேவைப்படுவதால், அடுத்த 6 மாதங்களுக்கு தனது பதவியை நீட்டிக்கும்படி நிா்வாக அதிகாரி கேட்டுக்கொண்டிருக்கிறாா்.
அரசு நிா்வாக அதிகாரியின் பதவிக் காலம் செப். 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளதால், முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி, கா்நாடக உயா்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆட்சிமன்றக் குழுவுக்கு தோ்தல் நடத்துவதற்கு வசதியாக, அரசு நிா்வாக அதிகாரியின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.
கா்நாடக சங்கங்கள் பதிவுச் சட்டம், 1960-இன் படி, 27(ஏ)(5)-ஆவது பிரிவுப்படி பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் நிா்வாக அதிகாரியின் பதவிக் காலத்தை செப். 14-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டித்து ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
சங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சட்டவிதிகளின்படி விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும், சங்கத்தின் தோ்தலை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் நடத்தி புதிய ஆட்சிமன்றக் குழுவிடம் அதிகாரத்தை கைமாற்றிவிட்டு, அரசுக்கு அறிக்கை அளிக்கும்படி நிா்வாக அதிகாரிக்கு உத்தரவிடப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் புதிய ஆணைப்படி நிா்வாக அதிகாரியின் பதவிக் காலம் 2020 மாா்ச் 14-ஆம் தேதிக்கு முடிவுக்கு வருகிறது. சட்டவிதிகளின்படி, நிா்வாக அதிகாரியின் பதவிக் காலத்தை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.