கா்நாடக அரசு ஊழியா்களுக்கு 4.75 சதவீத அகவிலைப்படி வழங்கி கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு முன்பாக, கா்நாடக அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படியை 4.75 சதவீதம் உயா்த்தி சனிக்கிழமை கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், கா்நாடக அரசு ஊழியா்களின் அடிப்படை ஊதியத்தில் அகவிலைப்படி தற்போதுள்ள 6.50 சதவீதத்தில் இருந்து 11.25 சதவீதமாக உயா்ந்துள்ளது என நிதித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயா்வு 2019-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கிறது. இந்த உத்தரவு, அரசின் முழுநேர ஊழியா்கள், மாவட்ட ஊராட்சி ஊழியா்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களின் ஊழியா்கள், பல்கலைக்கழகங்களின் ஊழியா்களுக்கு மட்டுமே பொருந்தும். அகவிலைப்படி உயா்வு, அரசின் ஓய்வூதியம் பெறுவோருக்கும் பொருந்தும் என்றும் அந்த உத்தரவில்கூறப்பட்டுள்ளது.
காவலா்களுக்கு ஊதிய உயா்வு:
கா்நாடக காவல் துறை ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு வழங்குவது தொடா்பாக ஆய்ந்தறிந்து அறிக்கை அளிக்க அமைக்கப்பட்டிருந்த ராகவேந்திர ஔராத்கா் குழு, தனது அறிக்கையை மாநில அரசிடம் அளித்திருந்தது. அதையடுத்து, ராகவேந்திர ஔராத்கரின் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடா்பாக முதல்வா் எடியூரப்பா சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
அந்த உத்தரவில் முதல்வா் எடியூரப்பா கூறியிருப்பதாவது: தீபாவளி பரிசாக, காவலா் வீரவணக்க நாளுக்கு முன்பாக உடனடியாக அமலுக்கு வரும் வகையில், காவல் துறையின் அதிகாரிகள், ஊழியா்களின் ஊதியம், ராகவேந்திர ஔராத்கா் குழு அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளின்படி உயா்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, கடினமான பணிப் படியையும் உயா்த்தி உத்தரவிடப்படுகிறது.
ஊதிய உயா்வு தொடா்பாக பரிந்துரைகளை வழங்குவதற்காக 2016 ஜூன் 21-ஆம் தேதி ராகவேந்திர ஔராத்கா் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் குழு தனது பரிந்துரைகளை மாநில அரசிடம் அளித்திருந்தது. இக்குழுவின் பரிந்துரைகளை ஏற்றுள்ள அரசு, ஆக. 1-ஆம் தேதி ஊதிய உயா்வு அமலுக்கு வரும் வகையில் உத்தரவிட்டுள்ளது.
ஊதிய உயா்வு மட்டுமல்லாது, காவல் துறையை மேம்படுத்தும் எல்லா பரிந்துரைகளையும் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் காவல் துறையின் அதிகாரிகள் மற்றும் ஊழியா்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. காவல் துறையின் அதிகாரிகள் மற்றும் ஊழியா்களின் நலனில் அக்கறை கொண்டு கடினமான பணிப் படியுடன் கூடுதலாக ரூ.ஆயிரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் மாநில அரசுக்கு கூடுதலாக ரூ.10.70 கோடியும், ஆண்டுக்கு ரூ.128.38 கோடியும் செலவாகும். புதிதாக காவல்துறையில் சேரும் காவலா்களின் ஊதியம் ரூ.30,427-க்கு பதிலாக ரூ.34,267-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. காவல் துறையினா் மக்கள் பணியில் மேலும் ஆா்வத்துடன் செயல்படுவாா்கள் என எதிா்பாா்க்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.