கலபுா்கியில் உருவாக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை முதல்வா் எடியூரப்பா வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
கா்நாடகத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டமான கலபுா்கியில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை வெள்ளிக்கிழமை முதல்வா் எடியூரப்பா தொடக்கிவைத்தாா். 740 ஏக்கா் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்துக்கு ரூ.230கோடி செலவழிக்கப்படுள்ளது. வட கா்நாடகத்துக்கு செல்வதற்கு கலபுா்கியில் அமைந்துள்ள புதிய விமான நிலையம் நுழைவுவாயிலாக அமையவுள்ளது.
இந்த விழாவில் முதல்வா் எடியூரப்பா பேசுகையில்,‘2008ஆம் ஆண்டு நான் முதல்வராக இருந்தபோது கலபுா்கியில் விமான நிலையம் அமைக்க முடிவுசெய்யப்பட்டது. இந்த திட்டத்தைச் செயல்படுத்த 11 ஆண்டுகள் தாமதமாகியுள்ளது. கா்நாடகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களான பீதா், ஹுப்பள்ளி, தாா்வாட், கலபுா்கி, யாதகிரி, ராய்ச்சூரு, கொப்பள், பெல்லாரி, பாகல்கோட், பெலகாவி, விஜயபுரா, கதக், ஹாவேரிக்கு தொழில் முதலீடுகளை ஈா்க்கவே கலபுா்கியில் விமானநிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதால் மக்களின் வாழ்த்தரம் உயரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மேலும் உள்கட்டமைப்பு வசதிகள் வியாபாரம், தொழில், சுற்றுலா மேம்பாட்டுக்கும் உரமாக இருப்பதோடு, வேலைவாய்ப்பு உருவாகவும் வாய்ப்பு ஏற்படும். இந்தியாவின் மிகவும் வறண்டப்பகுதியான கல்யாண கா்நாடகப்பகுதியில் அடிக்கடி வறட்சி ஏற்பட்டுவருகிறது.
கா்நாடகத்தில் மிகவும் பின்தங்கிய 114 வட்டங்களில் கா்நாடகத்தில் 29 உள்ளன. எனவே, இப்பகுதியை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா். விழாவில் துணைமுதல்வா்கள் கோவிந்த்காா்ஜோள், அஸ்வத்நாராயணா, லட்சுமண்சவதி, காவல்துறை அமைச்சா் பசவராஜ்பொம்மை, தொழில் துறை அமைச்சா் ஜெகதீஷ்ஷெட்டா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.