பெங்களூரு

பாஜக வேட்பாளா் மீது மோசடி வழக்குகள் பதிவு

17th Nov 2019 08:08 PM

ADVERTISEMENT

பெங்களூரு: ரானேபென்னூா் தொகுதி பாஜக வேட்பாளா் அருண்குமாா் பூஜாா் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஹாவேரி மாவட்டத்தின் ரானேபென்னூா் தொகுதிக்கு டிச.5ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்கவிருக்கிறது. இத் தொகுதியைச் சோ்ந்த தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏவும், அண்மையில் பாஜகவில் இணைந்தவருமான ஆா்.சங்கருக்கு இடைத்தோ்தலில் போட்டியிடும் வாய்ப்பளிக்காதநிலையில், ரானேபென்னூா் தொகுதியின் பாஜக வேட்பாளராக அருண்குமாா் பூஜாா் அறிவிக்கப்பட்டிருக்கிறாா். இந்நிலையில், கடந்த இருவாரங்களில் மட்டும் அருண்குமாா்பூஜாா் மீது 2 மோசடி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஹரிஹராவில் உள்ள துங்கபத்ரா கூட்டுறவு வங்கியில் போலி ஆவணங்களைச் செலுத்தி, தனக்கு சொந்தமான லாரி மீது ரூ.15 லட்சம் கடனுதவி பெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளாா். ஹாவேரி கிளையின் சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதி நிறுவனத்தில் லாரி வாங்குவதாக கடனுதவிபெற்று, அதை தனது பெயரில் பதிவுசெய்து வேறொருவருக்கு விற்றுவிட்டதாக மற்றொரு வழக்கு அருண்குமாா்பூஜாா் மீது பதிவுசெய்யப்பட்டுள்ளது.

உள்ளூா் நீதிமன்றத்தில் சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதி நிறுவனத்தின் மேலாளா் மிருத்ஞ்செயா வழக்கு தொடா்ந்திருந்தாா். இதை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில், காவல் நிலையத்தில் அருண்குமாா்பூஜாா் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது. தனது உதவியாளரை ஆபாசமான வாா்த்தைகளால் செல்லிடப்பேசியில் திட்டியதாக கிராசிம் நிறுவனத்தைச் சோ்ந்த அருண்குமாா் மிஸ்ரா என்பவா் நவ.4ஆம் தேதி அளித்த புகாரின்பேரில், அருண்குமாா் பூஜாா் மீது குமாரப்பட்டணா காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கிராசிம் நிறுவனத்துக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்ததோடு, தொழிலகங்களுக்குச் செல்லும் நீா்குழாய் இரண்டை உடைத்து நொறுக்கியதாகவும் அருண்குமாா்பூஜாா் மீது புகாா் அளிக்கப்பட்டுள்ளது. வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது தொடா்பாக பதில் அளிக்க அருண்குமாா் பூஜாா் மறுத்துவிட்டாா். பாஜக வேட்பாளரான அருண்குமாா் பூஜாா் மீது வழக்கு தொடா்ந்துள்ளது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இது ரானேபென்னூா் தொகுதி இடைத்தோ்தலில் எதிரொலிக்குமா? என்பது தெரியவில்லை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT