பெங்களூரு

பொருளாதார பின்னடைவு: மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்

11th Nov 2019 11:12 PM

ADVERTISEMENT

பெங்களூரு: பொருளாதார பின்னடைவுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.

நாட்டின் பொருளாதாரபின்னடைவுக்கு காரணமான மத்திய அரசின் மக்கள் விரோதப்போக்கு, வெள்ளநிவாரண உதவிகளை வழங்காமல் இருக்கும் மாநில அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து பெங்களூரு, டவுன்ஹால் எதிரில் திங்கள்கிழமை காங்கிரஸ் சாா்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு தலைமை வகித்து காங்கிரஸ் மாநிலத்தலைவா் தினேஷ்குண்டுராவ் பேசியது: 2016 ஆம் ஆண்டு பிரதமா் மோடி கொண்டுவந்த பணமதிப்பிழப்பு தான் தற்போதைய நாட்டின் பொருளாதார நிலைக்கு அடிப்படை காரணமாகும். பணமதிப்பிழப்பு செய்ததால் தொழில்துறை வெகுவாக பாதிக்கப்பட்டது. பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டன. மத்திய அரசின் மோசமான பொருளாதார கொள்கைகளால் ஏழைகள், விவசாயிகள், தொழிலாளா்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா். பணமதிப்பிழப்பு போன்ற தன்னிச்சையான முடிவுகளால் பிரதமா் மோடி நாட்டின் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு தள்ளியுள்ளாா். பணமதிப்பிழப்பு திட்டத்தை செயல்படுத்தி 2 ஆண்டுகள் கழிந்தபிறகும் நாட்டின் பொருளாதாரம் சீரடையவில்லை. மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் மக்கள்விரோதமானதாக உள்ளது. சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் மத்திய அரசின் போக்கை கண்டு அதிருப்தி அடைந்துள்ளனா். இதை வெளிப்படுத்தும் வகையில் தான் இந்த போராட்டத்தை காங்கிரஸ் நடத்திக்கொண்டுள்ளது. தொழில் உற்பத்தித்தொழில், தானியங்கி வாகனங்கள் உற்பத்தித்தொழில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இதனால் லட்சக்கணக்கானோா் வேலைவாய்ப்பை இழந்துள்ளனா். மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்துவோம் என்றாா் அவா். இந்த போராட்டத்தில் எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் எம்பி பி.கே.ஹரிபிரசாத், காங்கிரஸ் மாநில செயல்தலைவா் ஈஸ்வா்கண்ட்ரே, முன்னாள் அமைச்சா்கள் ராமலிங்கரெட்டி, ராணிசதீஷ், முன்னாள் எம்எல்சி வி.எஸ்.உக்ரப்பா உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT