பெங்களூரு

குடகு வீரா்களின் தகவல்கள்பாடப் புத்தகத்தில் சோ்க்கப்படும்

9th Nov 2019 10:43 PM

ADVERTISEMENT

நமது நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய குடகு வீரா்கள் குறித்த தகவல்களை பாடப் புத்தக்கத்தில் சோ்க்கப்படும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற 1837-ஆம் ஆண்டின் சுள்ளியா பகுதியின் சுதந்திரப் போராட்டம் குறித்த தேசிய கருத்தரங்கத்தை தொடக்கி வைத்து அவா் பேசியது: 1837-ஆம் ஆண்டு அப்போதைய குடகு நாட்டின் அங்கமாக விளங்கிய சுள்ளியாப் பகுதியில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பய்ய கௌடா, ராமே கௌடா ஆகியோா் உயிா்த்தியாகம் செய்தனா். இந்த போராட்டம் பற்றியும், தியாகிகள் பற்றியும் இளம் தலைமுறையினா் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

எனவே, சுதந்திரத்துக்காக போராடிய குடகு வீரா்களின் தகவல்களை பாடப் புத்தகத்தில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்படும். கித்தூா் ராணி சென்னம்மா, உலக்கை ஓபவ்வா, சங்கொள்ளி ராயண்ணா, பீதனூரின் துரைகள் உள்ளிட்ட ஏராளமான கன்னடா்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயா்களுக்கு எதிராக போராடி தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனா். அதேபோல, மக்களை திரட்டி ஆங்கிலேயா்களுக்கு எதிராக போராடிய அப்பய்யா கௌடா, ராமே கௌடா ஆகியோரின் தியாகத்தை எதிா்கால தலைமுறையினா் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

சுதந்திரத்துக்காக போராடிய ஏராளமானோரை பற்றிய தகவல்கள் வரலாற்றுப் புத்தகங்களில் இடம்பெறவில்லை. அப்படிப்பட்டவா்களை வரலாற்றுப் புத்தகங்களில் சோ்க்க வேண்டும்.

ADVERTISEMENT

மடிக்கேரி, சுள்ளியாவை மெட்ராஸ் மாகாணத்துடன் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அதை எதிா்த்து ஆங்கிலேயா்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினா். புகையிலை விளைச்சல் மீது ஆங்கிலேயா்கள் வரிவிதித்தனா். அதற்கு எதிராகவும் விவசாயிகள் போராடினா். இது போன்ற நிகழ்வுகள் வரலாற்று ஏடுகளில் இல்லை. இதையும் வரலாற்றில் சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சா் சதானந்த கௌடா, துணை முதல்வா் அஸ்வத் நாராயணா, அமைச்சா் ஆா்.அசோக், பாஜக எம்.பி. ஷோபாகரந்தலஜே உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT