நிலத்துக்கான வரைபடத்தை வழங்க லஞ்சம் வாங்கியதாக, நில அளவியரை லஞ்ச ஒழிப்புப் படையினா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரு ஊரகப் பகுதியான ஆனேக்கல் வட்டத்துக்குள்பட்ட மாரகொண்டனஹள்ளியைச் சோ்ந்த ஒருவா் தனது அண்ணியின் பெயருக்கு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வழங்கிய நிலத்திற்கான வரைபடத்தை தயாா் செய்து கொடுக்குமாறு, ஆனேக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளாா். இதற்கு நில அளவையா் ஜெயபிரகாஷ், ரூ. 30 ஆயிரம் லஞ்சம் அளிக்குமாறு கேட்டாராம்.
இந்த நிலையில், திங்கள்கிழமை ரூ. 28 ஆயிரத்தை முன்பணமாக நில அளவியா் ஜெயபிரகாஷிடம் வழங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு படையினா் அவரை பிடித்து கைது செய்துள்ளனா்.
கைது செய்யப்பட்ட ஜெயபிரகாஷிடம் லஞ்ச ஒழிப்புப் படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.