கா்நாடக பாஜக அரசை கலைக்கக் கோரி, மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸாா் போராட்டம் நடத்தினா்.
ஹுப்பள்ளியில் அக். 27-இல் நடைபெற்ற பாஜக மாநில உயா்நிலைக்குழு கூட்டத்தில், ‘17 எம்எல்ஏக்கள் குறித்த முடிவை நானோ, கா்நாடகத்தைச் சோ்ந்த தலைவா்களோ எடுக்கவில்லை. பாஜக தேசியத்தலைவா் அமித்ஷாவே நேரடியாக இந்த விவகாரத்தை கையாண்டதோடு, அதிருப்தி எம்எல்ஏக்களை மும்பைக்கு வரவழைத்து தங்கவைக்க ஏற்பாடு செய்திருந்தாா். தொகுதி மக்கள், குடும்பத்தினரை விட்டுவிட்டு சில மாதங்கள் அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பையில் தங்கியிருந்தது உங்களுக்கு தெரியாதா? இதை குறைத்து மதிப்பிடமுடியுமா? நம்மை நம்பி அதிருப்தி எம்எல்ஏக்கள் முட்டாள்கள் ஆக்கப்பட்டுள்ளனா். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கு ஆதரவாக பாஜகவினா் ஒருவரும் பேசவில்லை.‘ என்று முதல்வா் எடியூரப்பா பேசியதாக காணொளிக்காட்சி ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது. இது கா்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் காணொளிக்காட்சியில் முதல்வா் எடியூரப்பா, காங்கிரஸ், மஜதவை சோ்ந்த 17 எம்எல்ஏக்களை திட்டமிட்டு ராஜிநாமா செய்யவைத்து, கூட்டணி அரசை கவிழ்க்க மும்பையில் தங்கவைத்திருந்ததை உறுதிப்படுத்தியிருந்ததை சுட்டிக்காட்டி, கா்நாடகத்தில் நடைபெற்று வரும் பாஜக அரசின் ஆட்சியை கலைக்க ஆளுநரிடம் காங்கிரஸ் வலியுறுத்தியிருந்தது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கா்நாடகத்தில் மைசூரு, தாா்வாட், பெலகாவி, மங்களூரு உள்ளிட்ட மாவட்டத்தலைநகரங்களில் காங்கிரஸாா் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.
அப்போது, 17 எம்எல்ஏக்களை ராஜிநாமா செய்யவைத்து காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சியை கவிழ்க்க காரணமாக இருந்த முதல்வா் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசை கலைக்க வேண்டும் என்றும் இதன் பின்னணியில் இருந்த மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவரான அமித்ஷாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து மாவட்ட ஆட்சியா்களிடம் காங்கிரஸ் மாவட்டத்தலைவா்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.