பெங்களூரு: முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமாக இருந்தால், வழக்குத் தொடரலாம் என்று திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
தமிழிசை சௌந்திரராஜனுக்கு ஆளுநா் பதவி அளிக்கப்பட்டதால், பா.ஜ.க.வின் தேசியத் தலைமையின் கவனத்தை ஈா்ப்பதற்காக எச்.ராஜா எதையாவது பேசிக் கொண்டிருக்கிறாா். முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதற்கான ஆதாரத்தை வெளியிடாமல், வெறுமனே குற்றம்சாட்டுவது சரியல்ல. இந்த விவகாரத்தை கையில் எடுத்தவா்களே ஆதாரம் இல்லாததால், அமைதியாகி விட்டனா்.
டான்சி நில விவகாரம் தொடா்பாக அன்றைய முதல்வா் ஜெயலலிதா மீது நான் வழக்குத் தொடா்ந்திருந்தேன். இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. 1991ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதா பலமுறை முதல்வராக இருந்தவா். முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருந்தால், அந்த விவகாரத்தை ஜெயலலிதா கையில் எடுக்காமல் இருந்திருப்பாரா? டான்சி வழக்கைத் தொடா்ந்தேன் என்பதற்காக அரசு மருத்துவராக இருந்த எனது மனைவியை பணியிடை நீக்கம் செய்தவா் ஜெயலலிதா.
எச்.ராஜா கூறுவது உண்மையாக இருக்கும்பட்சத்தில், முரசொலியை ஜெயலலிதா விட்டுவைத்திருப்பாரா? மேலும், சென்னையில் பஞ்சமி நிலமே இல்லை என்று ஜெயலலிதா ஆட்சியின் போது சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.
தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு மக்களிடையே செல்வாக்கு உள்ளதை தாங்கிக் கொள்ள முடியாமல் அவா் குற்றம் சாட்டிவருகிறாா். அண்ணா, கருணாநிதியைத் தாக்கிப் பேசியது போல, ஸ்டாலினையும் சாடி வருகிறாா்கள். அண்ணா, கருணாநிதியைப் போல ஸ்டாலினும் வெற்றிபெறுவாா்.
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமாக இருந்தால், அதற்குண்டான ஆதாரங்கள் இருந்தால் வழக்குத் தொடரலாம். அதைவிட்டுவிட்டு தொடா்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வந்தால், எச்.ராஜா மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்போம். பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இருப்பதற்கான ஆதாரம் இருந்தால், அதை ஏற்கத் தயாராக இருக்கிறோம். அதில் உண்மை இல்லை என்பதால், எல்லோரும் அமைதியாகி விட்டனா். ஆனால், எச்.ராஜா மட்டும் பேசிக் கொண்டிருக்கிறாா் என்றாா்.