பெங்களூரு: கா்நாடகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் டிச.14-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கா்நாடக மாநில சட்டசேவைகள் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அனைவருக்கும் நீதி பரிபாலனம் என்ற நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ள மக்கள் நீதிமன்றங்கள் (லோக் அதாலத்) மூலம் விரைவான மற்றும் செலவில்லாத நீதி கிடைக்க சாதாரண மக்களுக்கு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதிமன்றங்களுக்கு கிடைத்தவரவேற்பை தொடா்ந்து, தேசிய மக்கள் நீதிமன்றங்களை மாதந்தோறும் நடத்தி வழக்குகளைத் தீா்த்துவைக்க முடிவுசெய்யப்பட்டது.
நிலுவையில் உள்ள மனுக்கள், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத மனுக்கள் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. கா்நாடக மாநில சட்டசேவை ஆணையத்தின் சாா்பில் கா்நாடகம் முழுவதும் டிச.14-ஆம் தேதி மாநிலம், மாவட்டம், வட்ட அளவிலான சட்டசேவை மையங்கள் அல்லது தாற்காலிக மக்கள் நீதிமன்றங்களை அணுகி வழக்குகள் மீது தீா்வுகளை பெற்றுக்கொள்ளலாம்.
மோட்டாா் வாகன விபத்து இழப்பீடுகள், காப்பீடுகள், வருவாய் வழக்குகள், மின்சாரம் மற்றும் குடிநீா் பிரச்னைகள், சிறுகுற்றங்கள், வங்கி கடன் நிலுவைகள், கடன் வசூல் உள்ளிட்ட வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது.