மக்களவைத் தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு அமைக்கப்பட்டுள்ள 3 மையங்களில் பெங்களூரு மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான மஞ்சுநாத் பிரசாத் ஆய்வு செய்தார்.


மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு அமைக்கப்பட்டுள்ள 3 மையங்களில் பெங்களூரு மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான மஞ்சுநாத் பிரசாத் ஆய்வு செய்தார்.
கர்நாடகத்தில் ஏப்ரல் 18, 23ஆகிய தேதிகளில் மக்களவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன. கர்நாடகத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் பதிவாகியுள்ள வாக்குகள் மே 23-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதற்காக மாநிலம் முழுவதும் 28 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெங்களூரில் உள்ள 3 தொகுதிகளுக்கும் 3 மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. வடபெங்களூரு மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளி வளாகத்திலும், தென்பெங்களூரு மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் எஸ்எஸ்எம்ஆர்வி கல்லூரி வளாகத்திலும், மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் மெளன்ட்கார்மேல் கல்லூரி வளாகத்திலும் எண்ணப்படவிருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை பெங்களூரு மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான மஞ்சுநாத் பிரசாத், 3 மையங்களிலும் சனிக்கிழமை ஆய்வு செய்தார். இம்மையங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை ஆய்வு செய்ததோடு, வாக்குகள் எண்ணுவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர், இதுகுறித்து மஞ்சுநாத் பிரசாத் கூறியது: வாக்கு எண்ணிக்கை மையங்களில் மொத்தம் 15 மேஜைகள் அமைக்கப்படும். ஒரு உதவி அதிகாரி, 4 ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியைக் கண்காணிப்பார்கள். வாக்கு எண்ணுவதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு மே 16, 21 ஆகிய தேதிகளில் பயிற்சி அளிக்கப்படும். அந்த ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்கள் குறித்து மே 23-ஆம் தேதி காலைதான் தெரிவிக்கப்படும். வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து காணொளியில் பதிவு செய்யப்படும். வாக்கு எண்ணிக்கையில் ஏதாவது சந்தேகம் இருந்தால், அது குறித்து தெளிவு பெற காணொளியைக் காணலாம். வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள நுழைவுச்சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com