புத்தகப் பையின் எடை பள்ளி மாணவரின் 10 சத உடல் எடையை விஞ்சக் கூடாது: கர்நாடக அரசு உத்தரவு

புத்தகப் பையின் எடை பள்ளி மாணவரின் 10 சத உடல் எடையை விஞ்சக் கூடாது என்று கர்நாடக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


புத்தகப் பையின் எடை பள்ளி மாணவரின் 10 சத உடல் எடையை விஞ்சக் கூடாது என்று கர்நாடக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
குழந்தை மற்றும் சட்டம் மையம்,  இந்திய பல்கலைக்கழக தேசிய சட்டப் பள்ளி ஆகியவை இணைந்து 2016-17-ஆம் கல்வியாண்டில் பள்ளிக் குழந்தைகளின் புத்தகப் பைகளின் எடைகளை ஆய்வு செய்தனர்.  இது தொடர்பாக குழந்தை மருத்துவர்களின் மருத்துவ ரீதியான விளைவுகளையும் கேட்டறிந்தனர். பள்ளி மாணவர்களின் முதுகு சுமையைக் குறைக்க, புத்தகப் பைகளின் எடையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு பரிந்துரைத்திருந்தனர். 
இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு அரசுக்குப் பரிந்துரை அளிக்க டாக்டர் வி.பி.நிரஞ்சனராத்யா தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டிருந்தது. இக் குழுவினரும் குழந்தைகளின் உடல்நலம் சார்ந்து பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு அளித்திருந்தனர்.  மாதத்தின் 3-ஆவது சனிக்கிழமையை புத்தகப் பையில்லாத நாளாகக் கடைப்பிடிக்கவும் வல்லுநர் குழு பரிந்துரைத்திருந்தது.  புத்தகப் பைகளின் எடையைக் குறைப்பது தொடர்பாகவும் அரசுக்கு ஆலோசனை வழங்கியிருந்தது.  இதுதொடர்பான முன்மொழிவுகள் கடந்த 2 ஆண்டுகளாக அரசின் பரிசீலனையில் இருந்தன. 
இந் நிலையில், வல்லுநர் குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டுள்ள மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறை,  பள்ளி மாணவர்களின் புத்தகப் பைகளின் எடைக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.  அதன்படி,  புத்தகப் பையின் எடை பள்ளி மாணவரின் 10 சத உடல் எடையை விஞ்சக் கூடாது என்று அந்த உத்தரவில் அரசு தெரிவித்துள்ளது.  1 முதல் 2-ஆம் வகுப்பு மாணவர்கள் 1.5 கிலோ முதல் 2 கிலோ,  3 முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்கள் 2 கிலோ முதல் 3 கிலோ, 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்கள் 3 முதல் 4 கிலோ, 9 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் 4-5 கிலோ எடை கொண்ட புத்தகப் பைகளை சுமக்கலாம் என்று அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 
மேலும் ஒன்றாம், இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்களை அளிக்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.  இந்த உத்தரவு அரசுப் பள்ளிகள், அரசு மானியம்பெறும் பள்ளிகள், அரசு மானியம்பெறாத பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  2-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்கள் புத்தகப் பைகளை பள்ளிகளிலேயே வைத்துச் செல்ல அனுமதிக்கலாம்.  பள்ளிகளிலேயே பள்ளிப் பாட நோட்டுப் புத்தகங்களை வைக்க அனுமதிக்கலாம்.  குழந்தைகள் குடிநீர் பாட்டில்கள் கொண்டு வராமல் தடுக்க வகுப்பறைகளிலேயே குடிநீர் வசதியை செய்து தரலாம்.  உணவுப் பெட்டியைக் கொண்டு வருவதைத் தவிர்க்க,  பள்ளிகளில் பாதுகாப்பான, தரமான உணவு வழங்கும் உணவகங்களை நிறுவலாம்.  
லகுவான பொருள்களால் செய்யப்பட்டுள்ள பைகளை மாணவர்கள் கொண்டுவர பள்ளிகள் அனுமதிக்கலாம்.  சக்கரம் கொண்ட அல்லது பளு குறைந்த பைகளைக் கொண்டுவர அனுமதிக்கலாம்.  நோட்டுப் புத்தகங்கள், வீட்டுப் பாடநோட்டுகள் 100 தாள்களுக்கு மிகாமல் இருப்பதை உறுதி  செய்யலாம். மேற்குறிப்பு நூல்களை பள்ளிகளிலேயே வைக்க அனுமதிக்கலாம்.  எந்த புத்தகங்களைக் கொண்டு வரவேண்டுமென்பதை மாணவர்களுக்கு தெரிவிக்க கால அட்டவணைகளை முன்கூட்டியே வழங்கலாம் என்ற பரிந்துரைகளை ஏற்று,  அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாக்டர் வி.பி.நிரஞ்சனராத்யா கூறுகையில்,2 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு பரிந்துரைகளுடன் அரசிடம் அளித்திருந்த அறிக்கையின் அடிப்படையில் தற்போது அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரவு பிறப்பித்துள்ளது மட்டுமல்லாது, இது முறையாக அமல்படுத்தப்படுகிறதா? என்பதை அரசு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கினால், புத்தகப் பைகளின் எடை குறைந்தது 1 முதல் 1.5 கிலோ குறையும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com