சமூகத் தடைகளை தகர்த்தெறிந்து பெண்கள் விஞ்ஞானிகளாக உயர வேண்டும்

சமூகத் தடைகளை தகர்த்தெறிந்து பெண்கள் அதிக எண்ணிக்கையில் விஞ்ஞானிகளாக உயர வேண்டும் என்று பேராசிரியர் எஸ்.சாட்டர்ஜி தெரிவித்தார்.

சமூகத் தடைகளை தகர்த்தெறிந்து பெண்கள் அதிக எண்ணிக்கையில் விஞ்ஞானிகளாக உயர வேண்டும் என்று பேராசிரியர் எஸ்.சாட்டர்ஜி தெரிவித்தார்.
பிரேக்த்ரூ அறிவியல் சங்கத்தின் சார்பில் பெங்களூரு, கேஎல்இ பியூ கல்லூரியில் சனிக்கிழமை அறிவியலில் பெண்கள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது. சங்கச் செயலாளர் கே.எஸ்.ரஜனி, அனைவரையும் வரவேற்று அறிமுக உரையாற்றுகையில்,அறிவியலில் பெண்களின் பங்களிப்பு குறைந்திருப்பது அனைவருக்கும் வருத்தம் அளித்தாலும், அது பெண்களுக்கான பணி இல்லை என்ற கருத்தியல் மாற வேண்டியுள்ளது. அறிவியல் ஆராய்ச்சியில் பெண்கள் ஆர்வம் காட்டி உழைக்க வேண்டும். அறிவியல் உலகில் காணப்படும் பாலின இடைவெளியைக் குறைக்க வேண்டும். அறிவியலை அனைவரும் கொண்டாட வேண்டும். மனித வாழ்வின் மேம்பாட்டுக்கு அறிவியல் சவால்களை அறிவியலை கொண்டே எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்றார் அவர்.
விண் இயற்பியல் பேராசிரியர் பிரஜ்வல் சாஸ்திரி பேசுகையில்,இந்தியாவில் உள்ள பெரும்பாலான அறிவியல் மையங்கள், பெண் விஞ்ஞானிகளை முறையாக அங்கீகரிப்பதில்லை. அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை ஒரு சதத்துக்கும் குறைவாக இருப்பது வேதனை அளிக்கிறது. பெண்கள் அறிவியல் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள் அல்ல என்ற கருத்தியலை உடைத்தெறிய வேண்டும். எல்லா துறைகளிலும் பெண்கள் சாதிக்கும்போது அறிவியல் ஆராய்ச்சியில் சாதிக்க முடியாதா? என்றார் அவர்.
ராமன் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் சுமதி சூர்யா பேசுகையில்,இந்தியாவில் பாலினம், ஜாதி, மதம் போன்ற பல்வேறு கூறுகளின் அடிப்படையில் பாகுபாடு காணப்படுகிறது. இந்தப் பாகுபாடு, பெண்களை அறிவியல் ஆராய்ச்சிக்கு கொண்டுவர பெரும் தடைக்கல்லாக உள்ளது. அறிவியல் ஆராய்ச்சியில் பெண்கள் ஈடுபடாமல் போனால் அது மனிதகுலத்துக்குத்தான் பேரிழப்பாகும். தாய்மை உள்ளம் கொண்ட பெண்களால்தான் அறிவியலை மனித சமூகத்துக்கு நல்ல முறையில் ஆற்றுப்படுத்த முடியும். அறிவியலுக்கு அதிக எண்ணிக்கையில் பெண்கள் வர மென்மேலும் விழிப்புணர்வு, கொள்கை முடிவுகள், ஆலோசனைகள், கல்வி விழிப்புணர்வு, முன்மாதிரிகள் தேவைப்படுகிறது. என்றார் அவர்.
பேராசிரியர் எஸ்.சாட்டர்ஜி பேசுகையில்,உலகிற்கு சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் போன்ற சிந்தனைகளை தந்த பிரான்ஸ் நாட்டில் எம்மி நியோதர் போன்ற பெண் விஞ்ஞானிக்கு போதுமான ஊக்குவிப்பு, அங்கீகாரம் கிடைக்காமல் போனது. ஒருவேளை அது சாத்தியப்பட்டிருந்தால், இன்றைக்கு ஏராளமான பெண்கள் விஞ்ஞானிகளாக உயர்ந்திருப்பார்கள். அறிவியல் ஆராய்ச்சியில் பெண்களால் ஈடுபட முடியாது என்ற மனத் தடை பெண்கள் மனதில் ஊன்றப்பட்டுள்ளது. ஆண்டாண்டுகாலமாக விதிக்கப்பட்டுள்ள சமூகத் தடைகளை தகர்த்தெறிந்து பெண்கள் அதிக எண்ணிக்கையில் விஞ்ஞானிகளாக உயர வேண்டும். அப்போதுதான் அறிவியல் உலகிலும் சமத்துவம் நிலைக்கும், பெண்களின் அறிவும் மனித சமூகத்துக்கும் பயன்படும் என்றார் அவர். இக்கருத்தரங்கில் பிரேக்த்ரூ அறிவியல் சங்கத் தலைவர் ஜி.சதீஷ்குமார், விஞ்ஞானிகள் ஜெயந்த்மூர்த்தி, ஜோஸ்னா தீக்ஷித், விரிவுரையாளர் பிரதீபா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com