கூட்டணி அரசு கவிழப் போவதாக பாஜக பகல் கனவு காண்கிறது

கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழப் போவதாக பாஜக பகல் கனவு காண்கிறது என்று துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.


கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழப் போவதாக பாஜக பகல் கனவு காண்கிறது என்று துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
இதுகுறித்து ஹுப்பள்ளியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ்  கூட்டணி அரசு கவிழப்போவதாக பாஜக தலைவர்கள் பகல் கனவு கண்டு வருகிறார்கள். கூட்டணி அரசு கவிழ்ந்ததும் பாஜக அரசு அமையப்போவதாகவும் கூறிவருகிறார்கள். பாஜக தலைவர்களின் எண்ணம் ஈடேறாது. பாஜகவுக்கு மீண்டும் பின்னடைவு ஏற்படப்போவதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு தனது 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். எனவே, ஆட்சிக் கவிழுமென்பது உண்மைக்கு எதிரானதாகும். கூட்டணி அரசுக்கு எவ்வித தொந்தரவும் இல்லை. மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் கூட்டணி அரசு ஆட்சியில் நீடிக்கும்.
மண்டியா மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட சுமலதாவை அம்மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர் சந்தித்துப் பேசியுள்ளது தொடர்பாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ்குண்டுராவ், மாவட்ட நிர்வாகிகளிடம் இருந்து அறிக்கை பெற்றிருக்கிறார். அந்த அறிக்கையைப் படித்த பிறகு சாதக-பாதகங்கள் குறித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கட்சி முடிவெடுக்கும். இது பெரிய விஷயமல்ல. 
இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் பாராட்டும்படியாக இல்லை. கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களில் தேர்தல் ஆணையம் இதுபோல நடந்து கொண்டதில்லை. நடத்தை விதிகள் என்ற பெயரில் வறட்சி நிவாரணப் பணிகளை செய்யவிடாமல் தேர்தல் ஆணையம் நடந்து கொள்கிறது. வளர்ச்சிப் பணிகள் ஆய்வு உள்ளிட்ட எந்தப் பணிகளிலும் அரசு ஈடுபடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இப்படி இருக்கையில் அதிகாரிகளுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய முடியாமல் இருக்கிறோம். தேர்தல் நடத்தை விதிகள் அரசின் கைகளை கட்டிப் போட்டுள்ளது. இது சரியான நடவடிக்கை அல்ல என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com