மங்களூரில் மே 9-இல் கத்ரிமஞ்சுநாத சுவாமி கோயிலில் பிரம்ம கலசாபிஷேகம்

மங்களூரில் மே 9-ஆம் தேதி கத்ரிமஞ்சுநாத சுவாமி கோயிலில் பிரம்ம கலசாபிஷேகம் நடைபெறுகிறது.

மங்களூரில் மே 9-ஆம் தேதி கத்ரிமஞ்சுநாத சுவாமி கோயிலில் பிரம்ம கலசாபிஷேகம் நடைபெறுகிறது.
தென்கன்னட மாவட்டம் மங்களூரில் அமைந்துள்ள கத்ரி பகுதியில் புகழ்பெற்ற மஞ்சுநாத சுவாமி கோயில் உள்ளது. தரைத்தளத்திலும், 20மீட்டர் உயரத்திலும் கோமூகதீர்த்தம் இருப்பது இக்கோயிலின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். இத்தீர்த்தங்களில் வற்றாமல் தண்ணீர் வருகிறது என்று பக்தர்கள்
நம்புகிறார்கள். 
800 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மஞ்சுநாத சுவாமிக்கு பிரம்ம கலசாபிஷேகம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, 12 ஆண்டுகளுக்கு பிறகு மஞ்சுநாத சுவாமி கோயிலில் பிரம்ம கலசாபிஷேக திருவிழா வியாழக்கிழமை கோலாகலமாக தொடங்கியது.
மே 11-ஆம் தேதி வரை இந்தவிழா நடக்கிறது. இந்தவிழாவின் அங்கமாக வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சிகளை கத்ரி ஜோகிமடத்தின் பீடாதிபதி ராஜநிர்மல்நாத் சுவாமிகள் சிறப்புபூஜை செய்து தொடக்கிவைத்தார். இதைத் தொடர்ந்து, தினமும் காலை, மாலை வேளைகளில் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம், பூஜைகள்
நடத்தப்படுகின்றன. 
விழாவின் முக்கிய நிகழ்வாக பிரம்மகலசாபிஷேகம் விழா மே 9-ஆம் தேதி காலை 9.35 மணிக்கு நடைபெறுகிறது. அந்தவிழாவில் சுயம்புவடிவில் எழுந்தருளியுள்ள மஞ்சுநாத சுவாமிக்கு கோயிலில் உள்ள தீர்த்தகுளத்தில் இருந்து பாக்குமரப்பட்டைகளில் காசிதீர்த்தம் கொண்டு வந்து மகாதண்டம் எனப்படும் அபிஷேகம் செய்யப்படுகிறது. 
இக்கோயில் வளாகத்தில் உள்ள துர்காபரமேஸ்வரி மற்றும் சனீஸ்வரபகவானுக்கு தனித்தனியே சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சன்னதிகளிலும் மே 9-ஆம் தேதி அபிஷேகம் செய்யப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இதையடுத்து, மே 10-ஆம் தேதி மஞ்சுநாத சுவாமிக்கு ருத்ராபிஷேகமும், ருத்ரயாகமும் நடத்தப்படுகிறது. இந்தவிழாவுக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத் துறை செய்துவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com