பெங்களூரு

"மழை நீரைச் சேகரிக்க பொதுமக்களை ஊக்குவிக்க வேண்டும்'

29th Jun 2019 10:00 AM

ADVERTISEMENT

மழை நீரை சேகரிக்க பொதுமக்களை ஊக்குவிக்க வேண்டும் என எம்.எல்.ஏ. விஸ்வநாத் கேட்டுக் கொண்டார்.
பெங்களூரு மாநகராட்சி மாமன்ற மாதாந்திரக்கூட்டம் மேயர் கங்காம்பிகே தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு எலஹங்கா தொகுதி பாஜக எம்.எல்.ஏ. விஸ்வநாத் பேசியது: பெங்களூரில் முன்பு குளத்திலும், ஏரியிலும் பின்னர் கிணற்றிலும் குடிநீரை எடுத்து பயன்படுத்தி வந்தோம். அண்மைக்காலமாக ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே, நிலத்தடி நீரை அதிகரிக்கச் செய்ய, மழை நீரை சேகரிக்க பொதுமக்களை ஊக்குவிக்க வேண்டும். 
அதே நேரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா மற்றும் அலுவலகங்களில் மழை நீரை சேகரிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழை நீரை சேகரிப்பதன் மூலம் நிலத்தடி நீரை உயர்த்த முடியும்.
மேலும் சாலைகள் அமைப்பதற்கும், அகலப்படுத்துவதற்கும் நிலங்களை வழங்க பொதுமக்கள் முன்வந்தாலும், அதனை பெற்று கொள்வதற்கான ஆவணங்களை வழங்க அதிகாரிகள் முன் வருவதில்லை. 
இதனால் சாலை அமைக்க, அகலப்படுத்த நிலங்களை கொடுக்க விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் தற்போது தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே, இதுகுறித்து மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதே கோரிக்கையை எம்.எல்.ஏ.க்கள் முனிரத்னா, சதீஷ்ரெட்டி உள்ளிட்டோரும் வலியுறுத்தினர். 
சாலைகள் அமைப்பதற்கும், அகலப்படுத்துவதற்கும் தேவையான ஆவணங்களை பொதுமக்கள், விவசாயிகள் வழங்கினால் அதிகாரிகள் பெற்றுக் கொண்டு, ஆவணங்களை பெற்று கொண்டதற்கான அத்தாட்சியை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்குவதோடு, அந்த நிலத்திற்கு உரிய விலையை விரைவாக வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT