கர்நாடக மாநிலம், தும்கூரு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் காயமடைந்தனர்.
தும்கூரு அருகே உள்ள சித்தாப்புரா தேசிய நெடுஞ்சாலை 75-இல் வெள்ளிக்கிழமை எடியூரிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற காரின் டயர் திடீரென வெடித்தது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.
இதில் காரிலிருந்த பெங்களூரு சஞ்சய் நகரைச் சேர்ந்த நிர்மலா, குப்பம்மா, வீரம்மா, நாகம்மா, கோவிந்தமணி, செல்வி, பாஞ்சாலி உள்ளிட்ட 7 பேர் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர். காயமடைந்த 4 பேர் குனிகல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து அம்ருத்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.